குடியரசுத் தலைவர் தேர்தல்: சரத் பவாரை சமாதானம் செய்ய முயற்சி; மம்தா பானர்ஜி சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மறுத்து விட்ட நிலையில் அவரை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2ம் தேதி சரிபார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4,033 மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளனர். அவர்களின் வாக்கு மதிப்பு என்பது மக்கள் தொகையில் கணக்கிடப்படுகிறது. எடுத்துகாட்டாக உத்தர பிரதேச எம்எல்ஏவுக்கு அதிகமான வாக்கு மதிப்பு இருக்கும். மக்கள் தொகை குறைவாக கொண்ட வட கிழக்கு மாநில எம்எல்ஏக்களின் வாக்குமதிப்பு குறைவாக இருக்கும்.

மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,706 ஆக உள்ளது. அதாவது 49 சதவிகித வாக்குகள் உள்ளன. 51 சதவீதத்தை எட்டிப்பிடிக்க 13 ஆயிரம் வாக்கு மதிப்புகள் தேவை.

அதேசமயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவிகித வாக்குகள் உள்ளன. எனவே ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது.

அதே நேரம் பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

இதில் கலந்து கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் இதில் பங்கேற்க போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்து விட்டது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். வேறு சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அந்த சந்திப்பில் தேர்தலில் போட்டியிட சரத்பவார் ஆர்வம் காட்டவில்லை.

நேற்று மாலை மும்பையில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் "நான் போட்டியில் இல்லை, நான் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளராக இருக்க மாட்டேன்" என்று சரத் பவார் கூறியதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் சரத் பவாரை சந்தித்து பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என சரத் பவாரிடம் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி நாளையக் கூட்டத்தில் இதுபற்றி விரிவான விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE