’தேவாலயங்களில் சிவலிங்கத்தை தேடும் காலமும் தொலைவில் இல்லை’ - வெறுப்பு அரசியல் குறித்து நசிருதீன் ஷா கருத்து

By செய்திப்பிரிவு

’தேவாலயங்களில் சிவலிங்கத்தை தேடும் காலமும் தொலைவில் இல்லை’ என்று பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் உலகரங்கில் இந்தியா பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் கூட அவரது பேச்சு ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் தீரவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா இந்தியாவில் வெறுப்பு அரசியல் மேலோங்கி வருவதாக தனது கருத்துகளைத் முன்வைத்துள்ளார்.

அவருடைய பேச்சிலிருந்து.. பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு இந்த விஷம் பரவுவதைத் தடுக்க வேண்டும். ரிஷிகேஷில் தர்ம் சன்சட் நிகழ்ச்சியில் அவர் பேசியதை கடைபிடிப்பாரே ஆனால். இந்த வெறுப்பு விஷப் பரவலை அவர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூபுர் சர்மாவின் பேச்சு பாகிஸ்தானில், வங்கதேசத்தில், ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற பேச்சுக்கு மரண தண்டனையே கொடுக்கப்படும். ஆனால் இங்கு லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்ட பின்னரும் கூட எந்த ஒரு கண்டனமும் வரவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நூபுர் சர்மா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது எல்லாம் நேர்மையற்ற செயல். இதுபோன்ற வெறுப்புப் பேச்சுக்கள் இனியும் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நீங்கள் அமைதி, ஒற்றுமை பற்றி பேசுபவர்களை சிறையில் தள்ளுகிறீர்கள். இன அழிப்பு பற்றி பேசுபவர்களை பட்டும்படாமல் தட்டிக்கேட்கிறீர்கள். இரட்டை நிலைப்பாடு கூடாது. பாஜகவும், நூபுர் சர்மாவும் விளிம்பு அமைப்புகள் அல்ல. ஒரு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்புணர்ந்து பேச வேண்டாமா?

தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் அவர் வெறுப்பை வளர்த்துள்ளார். எதிர் கருத்து உடையவர்களை எதிர்ப்பதற்காகவே உற்பத்தி செய்யப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் இவை. இதே நிலை நீடித்தால் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலம் தொலைவில் இல்லை என்றே நான் நம்புகிறேன். மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக படுகொலை செய்தல், தலித்துகளை தாக்குதல் போன்ற வெறுப்பு சம்பவங்கள் கூடாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் பின்தங்கிய நிலைக்கு இத்தகைய செயல்களும் காரணம். காட்டுமிராண்டித்தனமான சில நாடுகளில் செய்வதை நாம் எந்தவிதத்திலும் பின்பற்றக் கூடாது.

இவ்வாறு நஸ்ருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE