5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆர்பிஐ - கார், வீட்டு கடன் சுலப தவணை அதிகரிக்கிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி வட்டி விகத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. 5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற இனங்களில் கடன் பெற்றவர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் 6 பேர் அடங்கிய குழு வட்டி உயர்வுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. இதனால் வட்டி விகிதம் தற்போது 4.90 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். கடந்த மே மாதத்தில் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக எச்சரிக்கையாக மேற்கொண்டுள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

நிதிக் கொள்கை குழு நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. ஆர்பிஐ கணிப்பின்படி டிசம்பர் வரையான காலம் வரை அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 11 நிதிக் குழு கூட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் ஒரே நிலையில் ஆர்பிஐ வைத்திருந்தது. தற்போது கடந்த மே 4-ம் தேதி உயர்த்தியது. அடுத்து 5 வாரங்களில் புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

புள்ளிகளை உயர்த்திய போதிலும் கரோனா தொற்று காலத்திற்கு முன்பிருந்த 5.15 சதவீதத்தை விட தற்போது குறைவுதான் என்று ஆர்பிஐ கவர்னர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளிடையிலான உணவு விநியோக சங்கிலி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

மே 21-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் பண வீக்கம் ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்பட்டதாக தாஸ் குறிப்பிட்டார்.

குறுகிய கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி உயர்த்தப்பட்டது. வீடு கட்டுவதற்கு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளிலும் கிராம கூட்டுறவு வங்கிகளிலும் 100 சதவீதம் கூடுதல் கடன் அளிக்கும் வகையில் வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE