காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்க கூடாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

By இரா.வினோத்

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கக்கூடாது என‌ உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வரும் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் 'மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது' என கடந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் கூறியது. இதற்கு தமிழக அரசும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக‌ உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த அணைக்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆணைய‌த்தின் 16-வது கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது விதிமுறை மீறலாகும். ஆணையத்தின் இந்த முடிவு காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது. மேகேதாட்டு குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும். எனவே மேகேதாட்டு குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், த‌மிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் கூறும்போது, ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டப்படும். காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்