“21-ம் நூற்றாண்டு இந்தியா, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை நோக்கி செல்கிறது” - பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான உறுதி மொழிகளை ஏற்பதற்கான தருணம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சககளின் வாரந்திரப் பெரு விழாவினை இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசின் கடன்சார் திட்டங்களுக்கான தேசிய இணையதளம் ஜன் சமர்த்-ஐயும், கடந்த 8 ஆண்டுகளில் இரண்டு அமைச்சகங்களும் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த மின்னணு கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விடுதலைப்பெருவிழாவின் சின்னம் பொறிக்கப்பட்ட சிறப்பு ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வெளியிட்டார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்வு ஜூன் 6-11 வரை நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: "நீண்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு வகையில் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். சிலர் அமைதி வழியிலும், சிலர் ஆயுதம் ஏந்தியும், சிலர் நம்பிக்கை மற்றும் ஆன்மீக வழியிலும் போராடியதை நாம் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நாளாக இது இருக்கிறது.

சுதந்திரப் போராட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வரும்வேளையில், நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பு பங்களிப்பை செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான, புதிய உறுதி மொழிகளை ஏற்பதற்கான தருணம் இது.

கடந்த எட்டு வருடங்களாக இந்தியா பன்முக நடவடிக்கைகளில் பணியாற்றி வருகிறது. இந்தக்காலக் கட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பாரத இயக்கம் ஏழை மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலவச வீடுகள், மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், தண்ணீர் மற்றும் இலவச சிகிச்சை ஆகியவை ஏழை மக்களின் கண்ணியத்தை அதிகப்படுத்தி வசதிகளை மேம்படுத்தியுள்ளது. கரோனா தொற்று காலத்தில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதன் மூலம், பசி பற்றிய பயத்திலிருந்து அவர்கள் விடுப்பட்டனர்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தை மையப்படுத்திய நிர்வாகமாக நாடு இருந்தது. ஆனால், தற்போது 21-ம் நூற்றாண்டில் இந்தியா, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை நோக்கி செல்கிறது. முன்பு திட்டங்களின் பயன்களை பெற அரசை நோக்கிச் செல்வது மக்களின் பொறுப்பாக இருந்தது. தற்போது மக்களை நோக்கி நிர்வாகத்தை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், இணையதளங்களை மக்கள் நாடுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசின் கடன் சார்ந்த திட்டங்களுக்கான தேசிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது பெரிய நடவடிக்கை. இந்த கட்டமைப்பு மாணவர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். அவர்களது கனவு நிறைவேற உதவும்.

எந்த சீர்த்திருத்தத்திலும் அதன் நோக்கம் தெளிவாக இருந்து, முறையாக அமல்படுத்தினால் சிறந்த முடிவுகள் உறுதி செய்யப்படும். கடந்த எட்டு ஆண்டுகளாக இளைஞர்களை முக்கியமாக கொண்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இது அவர்களுடைய திறனை வெளிப்படுத்த உதவும். நமது இளைஞர்கள் அவர்கள் விரும்பிய நிறுவனங்களையும், தொழில்களையும் சுலபமாக தொடங்கி நடத்த முடியும். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் முன்னோக்கி செல்வதுடன் மட்டுமல்லாமல், புதிய உயரத்தை அடைவதை நாம் உறுதி செய்துள்ளோம்.

அரசு எளிமைப்படுத்துவதற்கான சீர்த்திருத்தத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரி கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்படுகிறது. அரசு மின்னணு சந்தை இணையதளம் கொள்முதலை எளிமைப்படுத்தி வருகிறது. அரசுக்கு விற்பனை செய்வதை சுலபமாக்கியுள்ளது தெரிவித்தார். இந்த இணையதளத்தின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தொழில் செய்வதை எளிமைப்படுத்தியுள்ளது.

“சீர்திருத்தம், எளிமைப்படுத்துதல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கி செல்லும் நாம் ஒரு புதிய வசதியை அடைகிறோம். இந்தியா கூட்டாக எதையேனும் செய்ய தீர்மானித்தால், அது உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையாக மாறும் என்பதை கடந்த 8 ஆண்டுகளில் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். உலக நம்மை பெரிய சந்தையாக பார்க்காமல் புதுமையான, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, ஆக்கப்பூர்வமான, புதிய சுற்றுச்சூழலை அமைப்பதற்கான நாடாக நம்மை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் நாம் சாதாரண இந்தியனின் அறிவை நம்பியதால் இது சாத்தியமானது. வளர்ச்சியில் அறிவுசார்ந்த பங்கேற்பாளர்களாக நாங்கள் பொதுமக்களை ஊக்கப்படுத்தினோம். சிறந்த நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் எந்த தொழில் நுட்பமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், அவர்களால் எப்போதும் பாராட்டப்படுவதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்" இவ்வாறு பிரதமர்தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE