ராஜஸ்தான் மாநிலங்களவைத் தேர்தலில் பரபரப்பு: காங்கிரஸை தொடர்ந்து  ரிசார்ட்டில் பாஜக எம்எல்ஏக்கள்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 10-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இருகட்சிகளும் தங்களது எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக 5 வேட்பாளராக பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் எஸ்செல் குழுமத்தின் தலைவர் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திராவை களமிறக்கியுள்ளது.

பாஜகவு ஆதரவுடன் அவர் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எஸ்ஸல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவராவார்.

ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 3 மற்றும் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. சுபாஷ் சந்திரா ஐந்தாவது வேட்பாளராக களமிறங்குவதால் நான்காவது இடத்துக்கு இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரமோத் திவாரி போட்டியிடுகிறார்.

ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள். பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரான கன்ஷியாம் திவாரி ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிபெற 41 வாக்குகள் தேவை. காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸை பொறுத்தவரையில் இரண்டு இடத்தில் உறுதியான வெற்றி உள்ளது. மேலும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 15 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

பேருந்தில் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

13 சுயேச்சைகள், இரண்டு ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி உறுப்பினர்கள், பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரு எம்எல்ஏக்கள், இரண்டு சிபிஎம் எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலனாவர்கள் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் 3-வது இடத்தில் வெல்ல காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் அவர்களுக்கு 30 உபரி வாக்குகள் உள்ளன. கூடுதலாக வெற்றி பெற இன்னும் 11 வாக்குகள் தேவை. எனவே 4-வது இடத்தில் யார் வெற்றி பெறுவது என்பதில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர். சிறிய கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை காங்கிரஸ் நம்பியுள்ளது. அதேசமயம் பாஜக சுயேச்சைகளை வளைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தங்களது எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 10-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. கூட்டதுக்கு பின்பு பாஜக தங்களது எம்எல்ஏக்களை இரண்டு பேருந்துகளில் ஏற்றி இன்று ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கூறுகையில் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக ரிசார்ட்டில் பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். ‘‘இது ஒரு பயிற்சி முகாம், இதில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து எம்எல்ஏக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்’’ எனக் கூறினார்.

முன்னதாக ராஜஸ்தானின் ஆளும் காங்கிரஸ் தனது சட்டப்பேரவை உறுப்பினர்களை உதய்பூருக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் குதிரை பேரத்திற்கு பயந்து காங்கிரஸ் கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் பலரை உதய்பூரில் உள்ள ஹோட்டலுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE