சல்மான் கான் கொலை மிரட்டல் கடிதத்தில் கொள்ளை கும்பல் குறியீடுகள்: போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

மும்பை: சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தில் இருந்த கொள்ளை கும்பலின் இனிஷியல்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சலீம் கான் அவரது மகன் சல்மான் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்களின் மும்பை வீட்டின் வெளியில் ஒரு கடிதம் கிடந்தது. அந்தக் கடிதத்தில் சலீம் கான், சல்மான் கான் நீங்கள் இருவரும் சித்து மூஸ் வாலாவைப் போல் போகப் போறீர்கள் என்று எழுதியிருந்தது. மேலும் அதில் G.B., L.B. என்ற இனிஷியல்கள் எழுதப்பட்டிருந்தது.

இதில் G.B. என்பது கோல்டி ப்ரார் கும்பல் தலைவனின் பெயர், L.B. என்பது லாரன்ஸ் பிஷ்னோய் சுருக்கம். இவர்கள் இருவருமே பெரும்புள்ளிகளை மிரட்டி பணம் பறித்தல், பணத்துக்காக கொலை செய்தல், கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஆவர். இவர்களில் கோல்டி பிரார் கனடாவில் இருக்கிறார். லாரன்ஸ் பிஷ்னோய் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சல்மான் கானின் ரெடி திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போதே சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த லாரன்ஸ் பிஷ்னோய் திட்டமிட்டிருந்தார். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த நரேஷ் ஷெட்டி என்பவரிடம் சல்மானை தாக்கும் பணியை கொடுத்திருந்தனர். ஆனால், ஆயுதப் பிரச்சினையால் அந்த தாக்குதல் நடைபெறவில்லை.

சல்மான் கானின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE