ஜம்மு காஷ்மீரில் ஒரே வாரத்தில் இந்துக்கள் உட்பட 8 பேர் படுகொலை - அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீரில் ஒரே வாரத்தில் இந்துக்கள் உட்பட 8 பேர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்தும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அமர்நாத் யாத்திரை ஏற்பாடுகள் தொடர்பாகவும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர், காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது காஷ்மீரில் அதிகரித்துள்ளது.

காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்றுமுன்தினம் புகுந்த மர்ம நபர், இந்து மதத்தை சேர்ந்த மேலாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அடுத்த சில மணி நேரத்தில், மத்திய காஷ்மீர் பகுதியில் செங்கல்சூளையில் இருந்து திரும்பிய வெளிமாநில தொழிலாளர்கள் இருவரை தீவிரவாதிகள் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய காஷ்மீர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

அதற்கு முன்பாக 3 போலீஸார் மற்றும் டி.வி. நடிகை ஒருவரையும் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். சில நாட்களுக்கு முன்பு, இந்து மதத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீர் பண்டிட்கள் நூற்றுக்கணக்கானோர், ஸ்ரீநகர் உட்பட பல இடங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்டிட்கள் பலர், பாதுகாப்புக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பண்டிட் ஒருவர் ஆன்லைனில் வெளியிட்ட வீடியோ பதிவில், “அரசு எங்களை பிணைக் கைதிகளாக்கிவிட்டது. வீடுகளை விட்டு வெளியே செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால், எங்களை ஜம்மு செல்ல அனுமதிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநரை கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகள், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.

மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆனால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என அரசு இன்னும் கூறிவருகிறது’ என தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சி, ‘பாதுகாப்புப் படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டும் காஷ்மீரில் படுகொலை சம்பவங்கள் தொடர்வது, அரசின் முழு தோல்வியை காட்டுகிறது. காஷ்மீர் நிலவரம், நெருக்கடி நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு எங்கள் கவலையை தெரிவிக்கிறோம். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ என தெரிவித்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் மாநாட்டு கட்சி, தொடர் படுகொலைகள் முடிவுக்குவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ஆயுதப்படை தலைவர்கள் உட்பட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாக்கவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்