“100% பயனாளிகளுக்கு 100% பலன்” - விவசாயிகளுக்கு தவணை நிதி ரூ.21,000 கோடியை விடுவித்த பிரதமர் மோடி உறுதி

By செய்திப்பிரிவு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “100% பலன் 100% பயனாளிகளுக்கு சென்றடைய நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும்” என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் காணொலி வாயிலாக பொது மக்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 11-வது தவணை நிதியை பிரதமர் விடுவித்தார். சுமார் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.21,000 கோடி அளவிலான தொகை அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இத்திட்டத்தின் பயனாளிகளுடனும் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியது:

“முக்கியமான தருணத்தில் இமாச்சல பிரதேசத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற்றுள்ளனர். எனது அரசின் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பலன்களை வெளியிட்டதில் திருப்தி அளிக்கிறது. சிம்லாவிலிருந்து நாடு முழுவதும் பிரதமர் விவசாயிகள் வருவாய் நிதி திட்டத்தின் கீழ் நிதிப் பலன்களை விடுவித்ததில் மகிழ்ச்சி. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி.

இமாச்சல பிரதேசம் எனது கர்மபூமியாக இருப்பதால், இந்தத் தருணத்தில் அங்கு இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்டேன். 130 கோடி குடிமக்களின் குடும்பத்தின் உறுப்பினராக மட்டுமே எப்போதும் என்னைப் பார்க்கிறேனே தவிர, பிரதமராக பார்க்கவில்லை. ஒரு கோப்பில் கையெழுத்து போடும்போது மட்டும் தான் பிரதமர். அந்த தருணம் முடிந்தவுடன், நான் இனி உங்கள் குடும்பத்தின் உறுப்பினரே தவிர, பிரதமர் இல்லை. 130 கோடி நாட்டு மக்களுக்கு பிரதான சேவகராகவும் நான் இருக்கிறேன். நாட்டிற்காக என்னால் எதையும் செய்ய முடிகிறது என்றால், அது 130 கோடி நாட்டு மக்களின் ஆசியாலும், நல்வாழ்த்துக்களாலும் தான்.

130 கோடி குடிமக்களைக் கொண்ட எனது குடும்பத்தின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுடன் இணைந்திருக்கிறேன். 130 கோடி இந்தியர்களைக் கொண்ட இந்தக் குடும்பம்தான் என்னுடையது. என் வாழ்வில் நீங்கள்தான் எல்லாமே. இந்த வாழ்க்கையும் உங்களுக்காகவே.

எனது அரசு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அனைவரின் நலனுக்காகவும், ஒவ்வொரு இந்தியனின் கெளரவத்திற்காகவும், ஒவ்வொரு இந்தியனின் பாதுகாப்பு, முன்னேற்றம், மகிழ்ச்சி, அமைதியான வாழ்க்கைக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்ற உறுதிமொழியை மீண்டும் அளிக்கிறேன்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலை அமைப்பின் இன்றியமையாத அங்கமாகக் கருதியது, பின்னர் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அரசாங்கம் அதற்கு அடிபணிந்தது, பின்னர் திட்டங்களுக்கான பணம் செல்வதற்கு முன்பே கொள்ளையடிக்கப்படுவதை நாடு பார்த்துக் கொண்டிருந்தது.

ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மூன்றின் காரணமாக இன்று பயனாளிகளின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாகச் சென்றடைகிறது. முன்பு சமையல் அறையில் புகையால் அவதிப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்த நிலையில், இன்று உஜ்வாலா திட்டத்தில்
எல்பிஜி சிலிண்டர்கள் பெறும் வசதி உள்ளது. முன்பு திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம் இருந்த நிலையில் தற்போது ஏழைகளுக்கு கழிப்பறைகள் கண்ணியத்தை அளித்துள்ளன. முன்பு சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியாத நிலை இருந்தது, இன்று ஒவ்வொரு ஏழைக்கும் ஆயுஷ்மான் பாரத் ஆதரவு உள்ளது. முன்பு முத்தலாக் என்ற பயம் இருந்தது, இப்போது உரிமைக்காகப் போராடும் தைரியம் வந்துவிட்டது.

நலத்திட்டங்கள், நல்லாட்சி, ஏழைகளின் நலன் (சேவா சுஷாசன் அவுர் கரீப் கல்யாண்) ஆகியவை மக்களுக்கான அரசாங்கத்தின் அர்த்தத்தை மாற்றிவிட்டது. இப்போது அரசு மக்களுக்காக பாடுபடுகிறது. பிரதமரின் வீட்டு வசதித்திட்டம், உதவித்தொகைகள் அல்லது ஓய்வூதியத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஊழலின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு நிரந்தரம் என்று கருதப்பட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண அரசு முயற்சிக்கிறது

9 கோடி போலிப் பெயர்களை பலன் பட்டியலில் இருந்து நீக்கியதன் மூலம் நேரடிப் பலன் பரிமாற்றம் திருட்டு மற்றும் கசிவு ஆகிய அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் அவர்களது அன்றாடப் போராட்டம் குறைந்துள்ளது. அதிகாரம் கிடைத்துள்ளதன் மூலம் தற்போது தனது வறுமையை அகற்ற ஏழைகள் புதிய ஆற்றலுடன் செயல்படுகிறார்கள். இந்தச் சிந்தனையுடன், எங்கள் அரசாங்கம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கத் தொடங்கியது. அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு கவலையையும் குறைக்க நாங்கள் முயற்சித்தோம். நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் ஒன்று அல்லது மற்ற திட்டங்களால் பயனடைகின்றன என்பதை நான் பெருமையுடன் கூற முடியும்.

இமாச்சலப் பிரதேசத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஆயுதப் படைகளுக்கு அளித்த பங்களிப்பைக் குறிப்பிட விரும்புகிறேன். நான்கு தசாப்தங்களாக காத்திருந்து ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கியது இந்த அரசுதான். இமாச்சலத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிறைய பயனடைந்துள்ளது. வாக்கு வங்கி அரசியல் பல தசாப்தங்களாக நம் நாட்டில் நடந்து, நாட்டிற்கு பல கேடுகளைச் செய்துள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம், வாக்கு வங்கிக்காக அல்ல.

100% பலன் 100% பயனாளிகளுக்கு சென்றடைய நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். பயனாளிகள் திருப்தி அடைவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. 100% அதிகாரமளித்தல் என்பது பாகுபாடு மற்றும் மகிழ்ச்சிப்படுத்துதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும்.

இந்தியா கட்டாயத்தின் பேரில் நட்பு கரம் நீட்டுவதில்லை. மாறாக உதவிக்கரம் நீட்டுகிறது. கரோனா காலத்தில் கூட, நாம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளோம்

21-ஆம் நூற்றாண்டின் ஒளிமயமான இந்தியாவுக்காகவும், வரும் தலைமுறையினரின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் உழைக்க வேண்டும். இந்தியாவின் அடையாளம், பற்றாக்குறை அல்ல... நவீனத்துவம். நமது திறமைக்கு முன்னால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. இன்றைய இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இன்று இந்தியாவில் வரலாறு காணாத அன்னிய முதலீடு குவிந்துள்ளது, இன்று இந்தியா ஏற்றுமதியிலும் சாதனை படைத்து வருகிறது. நமது நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பங்கேற்று தங்கள் பங்கை ஆற்ற அனைவரும் முன்வர வேண்டும்” என்றார் பிரதமர் மோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்