'இந்திய பிரிவினையை மையமிட்டு எழுதிய டோம்ப் ஆப் சேண்ட் நாவல்' - இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கர் பரிசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச அளவில் மிகவும் உயரியதாக கருதப்படும் புக்கர் பரிசு, இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ (64), கடந்த 2018-ம் ஆண்டு ‘ரெட் சமாதி’ (Ret samadhi) என்ற நாவலை எழுதினார். இந்த நாவலை ஆங்கிலத்தில் ‘டோம்ப் ஆப் சேண்ட்’ என்ற தலைப்பில் டெய்சி ராக்வெல் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அந்த மொழிபெயர்ப்பு நாவல் இந்தாண்டுக்கான புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு குடும்பத்தில் நடைபெற்ற கதைதான் ‘ரெட் சமாதி’ நாவல். கணவன் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணை மையப்படுத்தி இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. அந்தத் தொகையை கீதாஞ்சலி ஸ்ரீயும் அவரது நாவலை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டெய்சி ராக்வெல்லும் பகிர்ந்து கொள்கின்றனர்.

விழாவில் ஏற்புரை வழங்கிய கீதாஞ்சலி, ‘‘புக்கர் பரிசு பற்றி நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படி ஒரு கனவுகூட கண்டதில்லை. என்னுடைய நாவல் புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதை அறிந்து உணர்ச்சி பெருக்கில் இருக்கிறேன். எனக்கு மிகப்பெரிய அங்கீாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. தெளிந்த வானத்தில் இருந்து திடீரென மின்னல் வெட்டினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட உணர்வில் இருக்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து புக்கர் பரிசு தேர்வாளர்கள் கூறும்போது, ‘‘டோம்ப் ஆப் சேண்ட் நாவல் தவிர்க்க முடியாதது’’ என்று குறிப்பிட்டனர். நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டெய்சி ஓவியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அமெரிக்காவின் வெர்மான்ட் பகுதியில் வசிக்கும் அவர் கூறும்போது, ‘‘டோம்ப் ஆப் சேண்ட் நாவல், இந்தி மொழிக்கான காதல் கடிதம்’’ என்று பாராட்டினார்.

நடப்பு 2022-ம் ஆண்டு புக்கர் பரிசுக்காக மொத்தம் 135 புத்தகங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் கடைசியாக 6 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ‘டோம்ப் ஆப் சேண்ட்’நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE