அதிகபட்ச வேலைவாய்ப்புகளை கொண்டதாக ட்ரோன் துறை உள்ளது  - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும் போது அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான "பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022" –ஐ பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் விமானிகளுடன் கலந்துரையாடிய அவர் வான்வெளி ட்ரோன் செயல் விளக்க காட்சிகளை பார்வையிட்டார். ட்ரோன் கண்காட்சி மையத்தில் புதிய தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரிராஜ் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ், மாநிலங்களின் பல அமைச்சர்கள், தலைவர்கள், ட்ரோன் தொழில்துறை உடைமையாளர்கள் கலந்துகொண்டனர். 150 ட்ரோன் விமானி சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ட்ரோன் கண்காட்சி, தொழில்முனைவோரின் நல்லுணர்வு, இந்த துறையில் புதிய கண்டுபிடிப்பு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. விவசாயிகள் மற்றும் இளம் பொறியாளர்களுடன் நான் கலந்துரையாடினேன். ட்ரோன் துறையில் ஊக்கமும், ஆர்வமும் கண்கூடானது. இது இந்தியாவின் பலம் மற்றும் முன்னிலைக்கு பாய்ச்சல் வேகத்தில் செல்வதற்கான விருப்பத்தின் அறிகுறியாக உள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க அதிகபட்ச வாய்ப்புகளை கொண்ட மிகப்பெரிய துறையாக இருப்பதை இது காட்டுகிறது.

இந்தியாவில் நல்ல நிர்வாகத்திற்கான புதிய மந்திரங்களை நாம் 8 ஆண்டுகளுக்கு முன் அமலாக்க தொடங்கினோம். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற பாதையை பின்பற்றி வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் வணிகத்தை எளிதாக்குவதற்கும் நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற பாதையில் முன்னேறிச் செல்வதன் மூலம் நாட்டின் அனைத்து குடிமக்களையும் வசதிகள் மற்றும் நல்வாழ்வு திட்டங்களுடன் நாங்கள் இணைத்திருக்கிறோம்.


முந்தைய அரசுகள் காலத்தில் பிரச்சனையின் பகுதியாக தொழில்நுட்பம் கருதப்பட்டது. தொழில்நுட்பத்தை ஏழைகளுக்கு எதிரானதாக சித்தரிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதன் காரணமாக 2014-ம் ஆண்டுக்கு முந்தைய நிர்வாகத்தில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக மாறுபட்ட கருத்துச்சூழல் இருந்தது. நிர்வாக மனோபாவத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பம் மாற இயலாது. இதன் காரணமாக ஏழைகள், நலிவடைந்தோர், நடுத்தர வகுப்பினர் அதிகம் பாதிக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் வழங்குவதற்கு சிக்கலான நடைமுறைகள் அச்ச உணர்வுக்கு வழிவகுத்தன.

காலத்திற்கேற்ப மாறும்போது மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும். முழுமையடைதல் மற்றும் கடைக்கோடியினருக்கும் கிடைப்பதை உறுதி செய்தல் என்ற தொலைநோக்கு பார்வைக்கு தொழில்நுட்பம் அதிக அளவில் உதவி செய்துள்ளது. இதே வேகத்தில் முன்னேறி செல்வதன் மூலம் அந்த்யோதயா இலக்கை நாம் எட்ட முடியும் என்பதனையும் மக்கள், நிதி, ஆதார், செல்பேசி என்ற மும்முனை பயன்பாட்டின் மூலம் ஏழை பிரிவினருக்கு அவர்களின் உரிமையை வழங்க முடியும் என்பதையும் நான் அறிவேன்.

கடந்த 8 ஆண்டு கால அனுபவம் எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நாட்டிற்கு புதிய பலத்தை, வேகத்தை, உயர்வை அளிப்பதற்கான முக்கிய கருவியாக தொழில்நுட்பத்தை நாம் மாற்றியிருக்கிறோம். நாட்டில் யுபிஐ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பல லட்சம் கோடி ரூபாயை ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்ய உதவியாக இருந்தது. பெண்களும், விவசாயிகளும், மாணவர்களும் அரசிடமிருந்து நேரடியாக இப்போது உதவி பெறுகிறார்கள்.

மகத்தான புரட்சிக்கு ட்ரோன் தொழில்நுட்பம் எவ்வாறு அடிப்படையாக மாறியுள்ளது என்பதற்கு பிரதமரின் ஸ்வமித்வா திட்டம் உதாரணம். இந்த திட்டத்தின் கீழ் முதன் முறையாக நாட்டின் கிராமங்களில் உள்ள அனைத்து சொத்துக்களும் டிஜிட்டல் முறையில் வரைபடம் ஆக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு டிஜிட்டல் சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. நல்ல நிர்வாகம் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் என்ற நமது உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்ல மற்றொரு வழியாக ட்ரோன் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளது. ட்ரோன்கள் என்ற வடிவில் நாம் நவீன கருவியை பெற்றுள்ளோம். இது சாமானிய மக்கள் வாழ்க்கையின் பகுதியாக மாறியிருக்கிறது. பாதுகாப்பு, பேரிடர் நிர்வாகம், வேளாண்மை, சுற்றுலா, திரைப்படம், பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் பயன் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.


ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் வாழ்க்கையை நவீனமாக்குவதிலும் ட்ரோன் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை செய்யவிருக்கிறது. சாலைகள், மின்சாரம், கண்ணாடி இழை, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வருகையை கிராமங்கள் காணும் நிலையில் இன்னமும் வேளாண் பணிகள் பழைய முறையிலேயே நடத்தப்படுவது தடைகளுக்கும் குறைந்த உற்பத்தி திறனுக்கும் வீணாதலுக்கும் வழிவகுக்கிறது.

நில ஆவணங்கள் தொடங்கி வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணம் வரையிலான பல்வேறு பணிகளுக்கு வருவாய் துறையை தொடர்ந்து சார்ந்திருக்கிறோம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பயனுள்ள கருவியாக ட்ரோன் உருவாகியுள்ளது. விவசாயிகளுக்கு இனிமேல் தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக இல்லாததை உறுதி செய்து வேளாண் துறைக்கு உதவி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய காலங்களில் தொழில்நுட்பமும் அதன் கண்டுபிடிப்புகளும் கற்றறிந்தவர்களுக்கு உரியதாக கருதப்பட்டது. மக்களுக்கு முதலில் கிடைப்பதாக தொழில்நுட்பத்தை இன்று நாம் மாற்றியிருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு வரை ட்ரோன்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தன. மிகவும் குறுகிய காலத்தில் நாங்கள் பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கியிருக்கிறோம்.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி நடைமுறையில் வலுவான நிலையை உருவாக்குவதை நோக்கியும் நாம் முன்னேறுகிறோம். பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும்போது அதற்கேற்ப அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும்" என்று பிரதமர் பேசினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்