சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார் - கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனர்களுக்கு விசா கொடுக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் 30-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, நேற்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கடந்த 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கினார் என்றும் இதற்காக ரூ.50 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சிபிஐயின் குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரம் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, நேற்று நேரில் ஆஜராக வேண்டுமென்று கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றிருந்த கார்த்தி சிதம்பரம், நாடு திரும்பிய 16 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, இந்தியா திரும்பியதும் நேற்று காலை 8 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டதில் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். பல மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு ஆஜராகும்முன் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ‘‘எந்த ஒரு சீனரும் முறைகேடாக விசா பெற நான் உதவவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பால், வரும் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக பதிலளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE