'ஒவைசியை நம்பாதீர்' - முஸ்லிம் மக்களுக்கு பாஜக தலைவர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை யாரும் நம்ப வேண்டாம் என்று பாஜக தலைவர் ஹர்நாத் சிங் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஹர்நாத் சிங், "சுதந்திரத்திற்கு முன் நாட்டைப் பிரிக்க ஜின்னா என்ன செய்தாரோ அதேபோல் திட்டமிட்டு இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார். அவர் முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்துகிறார். அவரை முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டாம். ஒவைசி நாட்டைத் துண்டாடும் போக்கை நிறுத்தாவிட்டால் அவர் சிறையில் தான் காலம் கழிக்க வேண்டியிருக்கும்" என்றார்.

முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து பேசிய ஒவைசி, "நாட்டில் எரிபொருள் விலையேற்றம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை என எல்லாவற்றிற்கும் காரணம் அவுரங்கசீப், அக்பர், ஷாஜஹான் தான் காரணம். பிரதமர் எதற்குமே காரணமல்ல" என்று விமர்சித்திருந்தார்.

அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவை பற்றி விமர்சனங்களை முன்வைத்த ஒவைசி, "மதரஸாக்களை விமந்தா பிஸ்வா விமர்சித்துள்ளார். உண்மையில் தாழ்வு மனப்பாண்மை கொண்டவர்கள் தான் தங்களின் அந்த எண்ணத்தை மறைக்க இதுபோன்று பிதற்றுவார்கள். ராஜா ராம் மோகன் ராய் ஷாகாவில் படித்தாரா? மதரஸாவில் படித்தாரா? ஷாகாவுக்கும் மதரஸாவுக்கும் வித்தியாசம் உள்ளது. மதரஸாவில் நாங்கள் அன்பு, அமைதி, மனிதத்தை கற்றுத் தருகிறோம். கூடவே அறிவியலையும், கணிதத்தையும் கற்றுத் தருகிறோம். நாங்கள் உண்மையில் இந்தியாவை அழகாக மாற்றுகிறோம்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் ஒவைசி நாட்டைப் பிரிக்கிறார் என்றும், முஸ்லிம்கள் அவரை நம்ப வேண்டாம் என்றும் பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE