குருவுக்கு பதில் சிஷ்யன்: 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு பணியாற்றும் சுனில்: யார் அவர்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றம் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்த நிலையில் தற்போது அந்த பொறுப்பை அவரது சிஷ்யனாக கருதப்படும் சுனில் கனுகோலு ஏற்கவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு 2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரக் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகிய 8 முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பணிக்குழு 2024-ல் சிதம்பரம், பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கன் மற்றும் சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் சுனில் கனுகோலு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். அதன் பிறகு தனியாக பிரிந்து தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

பாஜக, காங்கிரஸுக்கு பணி

சுனில் கனுகோலு, வயது 40, வரும் மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமின்றி முன்னதாக வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவார் எனத் தெரிகிறது.

2017-ம் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பணியாற்றினார் சுனில். ஆனால் அண்மையில் நடந்து முடிந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சுனில் வேலை செய்தார். இதற்கு முன்னதாக தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், கனுகோலு வழிகாட்டியாக இருந்து அவரை நரேந்திர மோடியின் 2014 பிரச்சாரத்தை நிர்வகிக்கும் குழுவில் அங்கம் வகித்தார்.

பிரசாந்த் கிஷோரும் சுனிலும் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணி செய்தவர்கள். அப்போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த திட்டம் ஒன்றில் பணியாற்றுவதற்காக கடந்த2011-ல் குஜராத்துக்கு வந்தார் பிரசாந்த் கிஷோர்.

அப்போது முதல்வராக இருந்த மோடியுடன் தனக்கான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்ட கிஷோர், 2012 குஜராத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு வியூக வகுப்பாளராக களத்தில் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பணியாற்றியனார் பிரசாந்த் கிஷோர். அந்த நேரத்தில் கிஷோரின் அணியில் அவருக்கு கீழே இருந்தவர்தான் சுனில் கனுகோலு.

கிஷோரிடம் இருந்து பிரிந்த சுனில்

மோடிக்கு வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகம் வெற்றி பெற்றதும், பிஹாரில் நிதிஷ்குமார், பஞ்சாபில் அம்ரீந்தர் சிங், டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி என அடுத்தடுத்து வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுத்து அனைவராலும் கவனிக்கப்படும் நபராக பிரசாந்த் கிஷோர் மாறினார்.

ஆனால் 2015-ல் கிஷோருடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ‘ஐ–பேக்’நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் சுனில். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினுக்கான வெற்றி வியூகத்தை வகுக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார் சுனில். அந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறாவிட்டாலும் சுனிலை திமுக கைவிடவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றிக்காக வேலை செய்தார் சுனில்.

அதேசமயம் 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ கம்பெனி திமுகவுக்காக பணியாற்றியது. முந்தைய தேர்தல்களில் திமுகவுக்காக பணியாற்றிய சுனில் இந்தமுறை அதிமுக அணிக்காக பணியாற்றினார்.

பிரசாந்த் கிஷோருக்கு பதில்

முன்னதாக காங்கிரஸில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கி இருந்தார். இதனால்பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையக்கூடும் என மீண்டும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிப்பதற்கான வரைவு திட்டத்தை பிரசாந்த் கிஷோர் அளித்தார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி விவாதித்தார்.

ஆனால் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் பிரசாந்த் கிஷோர் வழங்க வேண்டிய பொறுப்பை சுனிலுக்கு காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. அதாவது பிரசாந்த் கிஷோர் அளித்த மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அவரது சிஷ்யனாக கருதப்படும் சுனிலுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்