சென்னை: பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைகிறது. ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவ.3-ம் தேதி மக்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் விதமாக, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5, டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, இந்த வரி குறைப்பை அமல்படுத்திய பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது.
இந்த சூழலில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் இது எதிரொலித்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ கடந்தும், டீசல் ரூ.100-ஐ கடந்தும் விற்பனையாகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இத்துடன், கரோனா பேரிடரின்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து, நமது அரசு ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகிறது. இதனால், முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆட்சியில் சராசரி பணவீக்கம் குறைந்துள்ளது.
பேரிடர் சூழலிலும் மக்களின் நலன் காக்க பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது உலக அளவில் அரசுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.1.05 லட்சம் கோடி உர மானியத்தோடு, கூடுதலாக ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழங்கப்பட்டும் வருகிறது.
ஏழை மற்றும் சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற பிரதமரின் கூற்றின்படி, மக்களுக்கு உதவும் நடவடிக்கையாக மற்றொரு அறிவிப்பை வெளியிடுகிறோம். அதன்படி, பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 வரை குறையும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
அனைத்து மாநில அரசுகளும் இந்த வரி குறைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியை குறைத்தபோதும், அதை குறைக்காத பிற மாநில அரசுகள் இந்த வரி குறைப்பை செயல்படுத்தி, சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்க இருக்கிறோம். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
அதிகம் இறக்குமதி செய்யப்படும் இடங்களில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரியையும் குறைத்துள்ளோம். இதனால் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறையும். இரும்பு, எஃகு மூலப் பொருட்கள் மீதான சுங்க வரி குறைப்பு குறித்தும் அளவீடு செய்து வருகிறோம். இரும்பின் சில மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு பொருட்களுக்கு வரி வசூலிக்கப்படும்.
சிமென்ட் விலையை குறைக்கவும், தாராளமாக கிடைக்கும் அளவுக்கு அதை இருப்பு வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தபோது, வாட்வரியை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆக.13-ல் லிட்டர் ரூ.102.49-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ஆக.14-ம் தேதி ரூ.99.47-க்கு விற்பனையானது.
மீண்டும் பெட்ரோல் விலை சற்று உயர்ந்த நேரத்தில், கடந்த நவ.3-ம் தேதி லிட்டர் ரூ.106.66-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் மத்திய அரசின் வரி குறைப்பை அடுத்து, நவ.4-ம் தேதி முதல் ரூ.101.40-க்கு விற்பனையானது. டீசல் விலையும் லிட்டர் ரூ.91.43 ஆக குறைந்தது.
தற்போது கலால் வரி குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் நேற்றைய நிலவரப்படி ரூ.110.85-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.35 ஆகவும், ரூ.100.94 என விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.93.94 ஆகவும் விற்கப்படும். இதனால், பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறையும். இந்த அறிவிப்பால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago