ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு: 50 மணி நேர போராட்டம் தோல்வி

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை 50 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது. அக்குழந்தையின் சொந்த கிராமத்தில் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பீஜாப்பூர் மாவட்டம் நாகத்தானே கிராமத்தில் ஹனுமந்த பாட்டீல்-சாவித்ரி தம்பதியின் 2-வது குழந்தை அக் ஷதா(4), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது நாய்கள் துரத்தியதால் பயந்து ஓடியதில் அருகிலிருந்த 50 அடி ஆழ ஆழ் துளைக் கிணற்றில் விழுந்தது.

போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். புனேயிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வரவழைக் கப்பட்டது. அப்பகுதி பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கம் தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மீட்புக் குழுவினருடன், ரோபோ உதவியுடன் குழந்தையை மீட்கும் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் புதன்கிழமை இணைந்து கொண்டார்.

ரோபோ கருவியை கிணற்றுக்குள் செலுத்தியபோது, குழந்தையின் மீது மணல் சரிந்ததால் குழந்தையின் கைகளை ரோபோவால் கவ்வ முடியவில்லை. ரோபோவின் மூலமாக ஒன்றரை அடி அளவிற்கு மணல் எடுக்கப்பட்டது.

சடலமாக மீட்பு

ரோபோ கருவியால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்படவே ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கம் அமைக்கும் பணி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

பாறைகள் நிறைந்த பகுதி என்பதாலும், அவ்வப் போது மழை பெய்ததாலும் சுரங்கம் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

50 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 30 அடி சுரங்கப் பாதையில் இருந்து துளை அமைத்து அதன் மூலமாக வியாழக்கிழமை இரவு 10.50 மணி அளவில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட அக்ஷதாவின் உடல் பீஜாப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த கிராமமான இப்னாலில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மணல் சரிவால் மரணம்

குழந்தை விழுந்தவுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்க முயன்றதிலும், கிணற்றை சுற்றி மக்கள் கூடி நின்றதாலும் அதிக அளவில் மணல் சரிந்திருக்கிறது. 30 அடி ஆழத்தில் தலைகீழாக கிடந்த குழந்தையை சிலர் மரக்கட்டைகளின் உதவியுடன் காப்பாற்ற முயன்றனர். அப்போது மரக்கட்டைகளும் ஆழ்துளைக் கிணற் றுக்குள் விழுந்துள்ளன. மேலும் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறி குழந்தை மரணமடைந்தது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன், ‘தி இந்து' விடம் கூறியதாவது: குழந்தை விழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் நாங்கள் அங்கு சென்றிருந்தால் உயிருடன் காப்பாற்றி இருக்க வாய்ப்பிருக்கிறது. கால தாமதம் ஆனதால் குழந்தையின் மீது ஏறக்குறைய 3 அடி உயரத்துக்கு மணல் சரிந்து பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

திரவம் மாதிரியான மணல் இருந்ததால் ரோபோவால் குழந் தையை கவ்வி பிடிக்க முடியவில்லை.இருப்பினும் முடிந்த அளவிற்கு மணலை உறிஞ்சினோம். இனி மணலை வேகமாக அள்ளும் அளவிற்கு ரோபோவை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE