காங்கிரஸால் பாஜகவை வீழ்த்தவே முடியாதா? - இப்படியொரு கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கலாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய நகர்வுகளை பாஜக ஏற்கெனவே எடுத்துவைத்துவிட்ட வேளையில், இந்தக் கேள்வி காங்கிரஸ் அனுதாபிகள் மத்தியில் இன்னும் மேலோங்கியிருக்கலாம். காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் இருந்து இவற்றிற்கான விடையைத் தேட ஆரம்பிப்போம்.
சிந்தனைக் கூட்டத்தின் கடைசி நாளில் பேசிய ராகுல் காந்தி, "பாஜக எப்போதும் காங்கிரஸ் பற்றி மட்டுமே விமர்சிக்கும், காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கும், ஏன் காங்கிரஸ் தொண்டர்களையும் கூட விமர்சிக்கும். ஆனால் ஒருபோதும் மாநிலக் கட்சிகள் பற்றி பேசவே பேசாது. ஏனெனில், மாநிலக் கட்சிகளின் நிலை என்னவென்று அவர்களுக்கு (பாஜக) தெரியும். மாநிலக் கட்சிகளுக்கு கொள்கை இல்லை. அதனால் அவற்றால் பாஜகவை வீழ்த்தமுடியாது என்றும் அவர்களுக்குத் தெரியும்" என்று பேசியிருந்தார்.
அந்தப் பேச்சு மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆவேசத்தை உண்டாக்கி இருக்கிறது. உண்மையில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது ஒரு விஷயம் தான். காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு தோல்விகளை சந்தித்திருந்தாலும் கூட பாஜக அதைத்தான் விமர்சிக்கிறது. பல ஆண்டுகளாக பல நூறு கோடிகளை காங்கிரஸின் ராகுல் காந்தியை 'முட்டாளாக', 'பப்பவுவாக' மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க செலவு செய்கிறது.
இப்போதைய தேசிய அரசியல் சூழலில் மோடிக்கு ராகுல் காந்தி நேரடிப் போட்டியே இல்லை. அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்கும் காங்கிரஸும் கூட பாஜகவுக்கு போட்டியில்லை. அப்புறம் ஏன் பாஜக எப்போதும் காங்கிரஸை மட்டுமே விமர்சிக்கிறது!? அதன் நிமித்தமான பிரச்சாரங்களுக்காக பணத்தை கொட்டுகிறது! மாநிலக் கட்சிகளை ஏன் பாஜக விமர்சிப்பதில்லை.
இவற்றிற்கு எல்லாம் ஒரே ஒரு குட்டி பதில் தான் இருக்கிறது. மத்தியில் ஆட்சியமைக்கக் கூடிய எண்கள் தான் இந்த விளையாட்டின் அடித்தளம். திரிணமூல் காங்கிரஸுக்கு 40 இடங்கள் தான் நாடாளுமன்றத்தில். அதனால் அந்தக் கட்சியைப் பற்றி பாஜகவுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால், காங்கிரஸ் புத்துயிர் பெற்றால் பாஜகவுக்கு நிச்சயம் பிரச்சினைதான். காங்கிரஸ் - பாஜக நேரடி பலபரீட்ச்சைக்குரிய இடங்களாக மட்டும் 150ல் இருந்து 200 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அதனால் தான் ராகுல் சொல்வது போல் பாஜக காங்கிரஸை மட்டுமே விமர்சிக்கிறது.
ஒருவேளை காங்கிரஸ் மாநிலக் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியை சந்தித்தால் அதற்கு என்ன கிடைக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலக் கட்சிகளிடமிருந்து மிரட்டலும், அழுத்தமும் கிடைக்கலாம்.
சிந்தனைக் கூட்டத்தில் ராகுல் கூறியதற்கும் அவ்வப்போது பிரசாந்த் கிஷோர் பேசுவதற்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை. பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் காங்கிரஸ் மீண்டு, புத்துயிர் பெற்று வர வேண்டும் என கிஷோர் கூறுகிறார். அவர் கூறுவதுபோல் 2024 தேர்தலுக்குள் காங்கிரஸ் அத்தகைய மறுமலர்ச்சியைக் காண போதிய கால அவகாசம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு சின்ன மீட்சி நடந்தால் கூட பாஜகவின் பெரும்பான்மை பலத்தில் ஒரு வெட்டு விழும். அதனால் மோடி கூட்டணிக்களை தாங்க வேண்டிவரும். அது மோடிக்கு எப்போதுமே விருப்பமானதாக இருந்ததில்லை.
மாநிலக் கட்சிகளின் அடையாளம் தான் என்ன? - 'மாநிலக் கட்சிகளுக்கு கொள்கை இல்லை' என்ற ராகுலின் விமர்சனத்தை பகுப்பாய்வு செய்து பார்ப்போம். பெரும்பாலான மாநிலக் கட்சிகள் சாதி, மொழி, இன அடையாளம் சார்ந்ததாகவே உள்ளன. அவைதான் அவற்றின் வெற்றியை தீர்மானிக்கும். ராகுல் சொல்வதுபோல் அவர்களிடம் கொள்கை இல்லை என்றுதான் கருத வேண்டும். திரிணமூல் கட்சியின் கொள்கை வலுவானதாக இருந்திருந்தால் அது வங்கத்தை வளைத்துக் கொண்டமாதிரி உ.பி.யையும் வளைத்திருக்க வேண்டுமல்லவா? திமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடிகிறது என்றால் அதற்கு மொழி அடையாளம் தான் காரணமே தவிர அதன் பாஜக எதிர்ப்புக் கொள்கை காரணமல்ல.
ஆகையால், ராகுல் மீது எத்தனை எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கூட அவரது நிலைப்பாடு சரிதான். காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் பாஜகவை வீழ்த்த முடியுமே தவிர மாநிலக் கட்சிகள் தனித்தோ அல்லது மூன்றாவது அணியாகவோ பாஜகவை வீழ்த்த முடியாது. அப்படி முயன்றால் அதற்கு காங்கிரஸின் ஆதரவு வேண்டும்.
கிஷோர் மாடலுக்கு காங்கிரஸ் தயாரா? - காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் ராகுலின் 'சிந்தனைக் குழந்தைகளா' அல்லது பிரசாந்த் கிஷோர் பரிந்துரைகளில் இருந்து எடுத்தாளப்பட்டவையா எனத் தெரியாத அளவுக்கு ஒரே மாதிரி உள்ளன. அதில் உள்ள சில அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அக்டோபர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சி தேசிய யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளது மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளலாம். இதைத்தான் பிரசாந்த் கிஷோரும் சொன்னார். காங்கிரஸ் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள இப்போதிருந்தே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறிவந்தார்.
இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சோனியாவின் நடவடிக்கை. சிந்தனைக் கூட்டத்தில் சோனியா காந்தி எல்லா தலைவர்களையும் பொறுமையோடு அணுகினார். உணவு வேளையில் தலைவர்களின் மேஜைக்கே சென்று பேச்சு கொடுத்து, யார் வேண்டுமானாலும் அவரை நேரடியாக அணுகலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார். இதுவும் பிரசாந்த் கிஷோரின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று தான்.
கிஷோரின் பார்வையில், காங்கிரஸ் கட்சி தன்னை அரசாங்கத்தை நடத்தும் வல்லமைமிக்க ஓர் இயல்பான கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவை ஆளும் கடினமான பணியைச் செய்யக் கூடிய நிர்வாகத் திறனும், அரசியல் வலுவும் இருக்கிறது என்பதை பிரகடனப்படுத்த வேண்டும். ஆனால் அதற்காக மோடிக்கு போட்டியாக ராகுலை முன்னிறுத்தக் கூடாது. இந்தப் போட்டி எப்போது மோடி Vs ராகுல் என்று உருவெடுக்கிறதோ அப்போதே அது காங்கிரஸ் ஏற்கெனவே தோற்றதை உறுதியாக்கிவிடுகிறது.
இந்தியாவுக்கு காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அனைவரையுமே அதன் அடையாளங்களாக, முகங்களாக படைக்க வேண்டும். ஆனால் மோடி மாடலைப் போல் ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற பாதையில் காங்கிரஸ் தவறாக பயணிக்க முற்படுகிறது. காங்கிரஸ் கட்சி தன் தலைவர்கள் அனுபவம் மிக்கவர்கள், தலைமைப் பண்பு நிறைந்தவர்கள் என்று வரிசைப்படுத்தி அடையாளம் காட்ட வேண்டுமே தவிர ஒற்றை அடையாளத்தை திணிக்க முற்படக்கூடாது.
ராகுல் மாடல் இருக்கக் கூடாதா? மோடி மாடல் ஒன்று இருக்கும்போது ராகுல் காந்தி மாடல் என்ற ஒன்றும் நிச்சயமாக இருக்கலாம். அந்த மாடலில் அவரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக்கலாம். அதுதான் அவருடைய நாடாளுமன்றத் திறன்களுக்கான சரியான கவுரவம். காங்கிரஸ் இந்த மாடலை எப்போது பின்றபற்ற ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்து வெற்றிப்பாதைக்கு திரும்பும். மற்றபடி அது முன்னெடுக்கும் மோடி Vs ராகுல் போட்டி, பாஜகவின் வெற்றியாக மட்டுமே முடியும்.
உங்களுக்குப் புரியவில்லையா ராகுல்? - ராகுல் காந்தி தனக்கு அதிகாரத்தில் நாட்டமில்லை என்று கூறினாலும் கூட அவர் இப்போது என்ன மாதிரியான அதிகாரங்களை கையில் வைத்திருக்கிறாரோ அதை ஒரு எள்ளளவேனும் விட்டுத்தர விருப்பமில்லாமல் தான் நடந்து கொள்கிறார். சரி, அப்படியென்றால் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றால் தோல்வி தரும் அவமானத்திலிருந்து தப்பிக்க விலகி நிற்கிறார். ராகுல் காந்திக்கு ஒரு 'சேஃப் ஸோன்' இருக்கிறது. நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி வழித்தோன்றலாகிவிட்டதால் கட்சியின் எண்ணிலடங்கா தோல்விகளுக்கு அவர் மன்னிக்கப்படுவார் என்பதே அது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்க, கட்சி நிர்வாகிகளை நியமிக்க, கொள்கைகளை வகுக்க 4ல் இருந்து 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் பரிந்துரைந்தார். அதில் தானும் ஒருவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்தக் குழுவில் ப.சிதம்பரம், பட்டியலின, சிறுபான்மைத் தலைவர்கள் என யார் வேண்டுமானாலும் எஞ்சிய இடங்களில் இருக்கலாம். அந்தக் குழுவின் முடிவை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்பதே அந்த மாடல். ஆனால் அப்படியொரு சட்ட அதிகாரத்தை 5 பேர் கொண்ட குழுவுக்கு வழங்க காங்கிரஸ் தயாராக இல்லை. இதுதான் பிரசாந்த் காங்கிரஸில் இணையும் முடிவைக் கைவிட மிக முக்கியக் காரணம் என்று கூட கூறப்படுகிறது.
உதாரணத்துக்கு, மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்தியால் நியமிக்கப்படும் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். அது எப்படி நடக்கிறது தெரியுமா? பிஹார் மாநிலத்திற்கு நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் ஒரு பட்டியலைக் கொடுக்கும், ஆனால் அதைத் தாண்டி ராகுலை சுற்றியிருக்கும் 'நோபிள் கோர்ட்!' ஒரு லிஸ்டை அளிக்கும். கடைசியில் பிஹார் மாநில காங்கிரஸ் தலைமையைக் கூட ஓரங்கட்டிவிட்டு 'நோபிள் கோர்ட்!' பரிந்துரை அமலுக்குவரும். ஆக, மாநிலங்களுக்கான நியமனங்கள் ஆங்காங்கே உள்ள சில துதிபாடிகள் கொடுக்கும் பரிந்துரைகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இது காங்கிரஸை எங்கே கொண்டு சேர்க்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
அட்டர் ஃப்ளாப்! - சிந்தனைக் கூட்டத்தின் மிகப்பெரிய தோல்வி என்றால் கட்சியின் முடிவு எடுக்கும் அதிகாரங்கள் வழிமுறைகள் பற்றி எந்தவொரு ஒருமித்த முடிவும் எட்டப்படாதது தான்.
காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று கூறும் ராகுல் காந்திக்கு அது நடக்காததற்கு காரணமே அவரும்தான் என்பது மட்டும் ஏன் புரியவில்லை!? கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் மோசமாக தோற்றுள்ளது. இப்போதைய சூழலில் கட்சியின் நிர்வாக, நியமன பொறுப்புகளில் தலையிடுவதில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதே மாண்புமிகுந்த செயல் என்பதை ஏன் அவர் உணரவில்லை? அவர் அதை உணரும்வரை காங்கிரஸ் லட்சக்கணக்கான சிந்தனைக் கூட்டங்கள் நடத்தினாலும் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம்.
பாசிஸத்தை எதிர்ப்பேன் என்று ராகுல் முழங்கலாம். ஆனால் அது வாக்குகளாக மாறப்போவதில்லை. அதற்கு காங்கிரஸ் கட்சியில் சின்னச் சின்ன மாற்றங்கள் அல்ல ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்தியை மட்டுமே முன்னிறுத்தும் போக்கு மாற வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் மாறாவிட்டால் எந்த முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை.
டேக் ஆஃப் ஆகட்டும்! - ராகுல் சிந்தனைக் கூட்டத்தின் கடைசி நாளில், "மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜக மக்களுடன் நல்ல தொடர்பில் உள்ளது. அவர்களிடம் அதிக பணம் உள்ளது, நாம் மக்களுடனான தொடர்பை சீர்படுத்த வேண்டும். இந்த தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அக்டோபர் மாதம் முதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொள்ளும். மக்களும் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாட்டை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பது மக்களுக்கு தெரியும்" என்று கூறியிருந்தார். அதைத்தான் அவர் இப்போது தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
ஒரு விமானிக்கு தரையிறங்குவதை சொல்லிக் கொடுத்தால் தான் விமானத்தை மேலெழுப்புவதையும் அவர் கற்றுக் கொடுக்க முடியும் என்பார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், அது விமானத்தை மேலெழுப்ப கற்றுக் கொள்ளவே இல்லை. ஆனால், அதை எப்படி க்ராஷ் லேண்ட் செய்ய மட்டும் கற்றுக் கொண்டிருக்கிறது.
2024 வெகு தூரத்தில் இல்லை. காங்கிரஸ் டேக் ஆஃப் ஆகட்டும்!
உறுதுணைக் கட்டுரை: தி பிரின்ட்
தமிழில்: பாரதி ஆனந்த்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago