டெல்லி, உ.பி.,யில் 49 டிகிரி வெயில்: 1966-க்குப் பின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு; மக்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நேற்று (மே 15) ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹரியானாவை ஒட்டிய முங்கேஸ்பூர் பகுதியில் தான் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லியில் இந்த அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

டெல்லியைப் போல் ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நேற்று மிகக் கடுமையான வெப்பநிலை பதிவானது. வெயில், அனல்காற்று என மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்கே ஜெனமணி கூறுகையில், "மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மேற்கிலிருந்து வரும் சலனங்கள் இருந்தன. ஆனால் எதுவுமே மழையைக் கொண்டு வரவில்லை. ஒன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இல்லாவிட்டால் பலத்த காற்று வீசியது. இதனால் வெப்பநிலை உயர்ந்ததே தவிர மழை வந்து ஆறுதல் தரவில்லை. டெல்லியில் ஏப்ரல் 21 மற்றும் மே 4 ஆகிய இரு தேதிகளில் மட்டுமே லேசான அளவில் மழை பெய்துள்ளது" என்றார்.

இந்த ஆண்டில் மே 15 ஆம் தேதி மிகவும் வெப்பமான நாள் என்று கருதும் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 70 ஆண்டுகளுக்குப் பின் அதிக வெப்பநிலை பதிவான ஏப்ரல் என்ற நிலையை எட்டியது. டெல்லி முழுவதுமே நேற்று பரவலாக 45 டிகிரி வெப்பநிலை சராசரியாக பதிவானது. இதில் முங்கேஸ்பூர், நஜாஃப்கர் பகுதிகளில் மட்டும் 49 டிகிரி வெப்பநிலை பதிவானது. இவை இரண்டுமே தென் கிழக்கு டெல்லியில் உள்ள பகுதிகள்.

ரெட் அலர்ட்: இதனிடையே வெப்பநிலை அதிகரிப்பதைக் கணித்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையை குறிப்பிட்டு பச்சை அலர்ட் விடுத்தால் நடவடிக்கை தேவையில்லை என்று அர்த்தம். மஞ்சள் அலர்ட் விடுத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டால் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம்.

இந்நிலையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இன்று அனல்காற்று அதிகரிக்கும் என்றும் நாளை (மே 17) இதன் வீரியமும் பரவலும் சற்று குறையலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடக்கு மற்றும் மேற்கு இந்தியா வெயிலில் பரிதவிக்க, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதை வலியுறுத்தி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE