இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து: ‘தெளிவான முடிவு எடுக்க வேண்டும்’ - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘‘ஜம்மு-காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் மற்ற மதத்தினரைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்’’ என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 25-ம் தேதி மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இந்துக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதே வழக்கு தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘‘சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முரண்பாடான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதலில் ஒரு நிலைபாட்டை அறிவித்துவிட்டு, அடுத்த பிரமாண பத்திரத்தில் அதற்கு எதிர்மறையான நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது. தெளிவான முடிவை எடுத்த பிறகே பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்துவிட்டு அடுத்த 3 மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE