குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் பாஜக - எதிர்க்கட்சிகள் தரப்பில் சரத் பவாரை முன்னிறுத்த மம்தா முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார்.

புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்களின் வாக்குகள் மிக முக்கியம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்எல்ஏக்கள் வாக்குகளும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன.

நாடாளுமன்றத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எம்எல்ஏக்களால் தங்கள் வேட்பாளர் தோல்வியுறலாம் என்ற அச்சம் பாஜகவுக்கு உள்ளது. இதனால் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிக்கான எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிட பாஜக தயாராக இல்லை.

இதற்காக தனது கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஏனைய கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்காக பாஜக தனது முக்கியத் தலைவர்களை நாடு முழுவதுக்கும் தூது அனுப்பியுள்ளது.

முதலாவதாக, பாஜக ஆதரவுடன் பிஹாரில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் சந்தித்தார். ஏனெனில் தனது கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடுகளையும் நிதிஷ் குமார் ஏற்கெனவே எடுத்துள்ளார்.

2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக முன்னிறுத்தியவரை விடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை அவர் ஆதரித்தார்.

2017-ல் லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணிக்கு மாறிய போதிலும் யுபிஏ வேட்பாளர் மீராகுமாரை தவிர்த்து, என்டிஏ வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிதிஷ் ஆதரவு அளித்தார்.

இதுபோன்ற காரணங்களால் பாஜக தலைமை சார்பில் நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரடியாக சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் குடியரசுத் தலைவர் தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன.

இதுபோல் ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் ஆகியோரிடம் பேசவும் பாஜக தூதர்களை நியமித்துள்ளது.

இந்த இருவரில் 2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் என்டிஏ வேட்பாளரை ஆதரித்த முதல்வர் ஜெகன் மீண்டும் என்டிஏவுக்கே ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் விலகியிருக்க விரும்பும் முதல்வர் நவீன், வேட்பாளரை பொறுத்து தனது ஆதரவை அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இவர் கடந்தமுறை குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத்துக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யுபிஏவின் கோபாலகிருஷ்ண காந்திக்கும் ஆதரவு அளித்திருந்தார்.

இதற்கிடையே மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை முன்னிறுத்த முயற்சிக்கிறார். இவரது அறிவிப்புக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கும் முடிவு, நேற்று தொடங்கியுள்ள அதன் சிந்தனையாளர் கூட்டத்துக்குப் பிறகே தெரியவரும். திமுக உள்ளிட்ட சில கட்சிகளும் தங்கள் நிலைப்பாடுகளை இதுவரை வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE