இந்தூர் சம்பவம் | காதலியைப் பழிவாங்க கட்டிடத்துக்கு தீ; 7 பேர் பலியான வழக்கில் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் தீ விபத்தில் 7 பேர் பலியான நிலையில், தனது காதலைப் புறக்கணித்தப் பெண்ணை பழிவாங்க இளைஞர் ஒருவர் அந்தக் கட்டிடத்துக்கு தீ வைத்தது அம்பலமாகியுள்ளது. சுபம் தீக்சசித் (சஞ்சய்) என்ற 28 வயதான இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் அவரது சொந்த ஊர் எனத் தெரியவந்துள்ளது.

நடந்தது என்ன? மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (மே 7) அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இந்தூர் நகரின் ஸ்வர்ண பாக் காலனியில் இரண்டடுக்கு மாடி குடியிருப்பில் தன இந்த தீவிபத்து நடந்தது. இந்தக் குடியிருப்பில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் இன்று (மே 7) அதிகாலை 3.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலை நேரம் என்பதால் அந்த குடியிருப்பிலிருந்து மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது திடீரென பிடித்த தீ அருகிலிருந்த இருச்சக்கர வாகனங்களுக்கும் பரவியது. பின்னர் கட்டிடம் முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. முதலில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது. கட்டிட உரிமையாளரையும் கைது செய்து போலீஸார் விசாரித்தனர்.

சுபம் தீக்‌ஷித் என்ற சஞ்சய்

காட்டிக்கொடுத்த சிசிடிவி: போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதிகாலை 2.55 மணிக்கு கைதான சுபம் தீக்சித் என்ற சஞ்சய் கட்டிடம் இருந்த பகுதிக்கு வருகிறார். குறிப்பிட்ட ஒரு இருசக்கர வாகனத்தில் தீயைப் பற்றவைக்கிறார். அந்த நெருப்பு மற்ற வாகனங்களுக்கும் பரவ அங்கிருக்க சிசிடிவியை அடித்து நொறுக்க முற்படுகிறார். ஆனால் அதற்குள் தீ வேகமாகப் பரவ அங்கிருந்து ஓடிவிடுகிறார். அந்தக் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் சஞ்சய் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்த இளம் பெண் ஒருவரை தான் நேசித்ததாகவும். தன்னிடம் அவர் நிறைய பண உதவிகளைப் பெற்றிருந்ததாகவும். ஆனால் திடீரென அவர் காதலைப் புறக்கணித்து வேறோர் இடத்தில் திருமணம் முடிவு செய்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்து தீ வைத்ததாகவும் கூறினார். ஆனால் அது இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை என்றார். பெண்ணைப் பழிவாங்க அவரது ஸ்கூட்டரை எரிக்கவே நினைத்தேன். ஆனால் 7 உயிர்கள் போய்விட்டன என்றார். இந்தச் சம்பவத்தில் அவர் பழிவாங்க நினைத்த பெண்ணும், அவரது தாயாரும் பிழைத்துக் கொண்டனர். கல்லூரி மாணவி உள்பட 7 பேர் பலியாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE