தெலங்கானாவில் குடும்ப ஆட்சி; ஒரு ராஜா ஆட்சி செய்கிறார்’’- சந்திரசேகர் ராவ் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தை ஒரு முதல்வர் ஆளவில்லை, ஒரு ராஜா தான் ஆட்சி செய்கிறார், குடும்ப ஆட்சி நடக்கிறது, தெலங்கானாவுக்கு துரோகம் செய்த கட்சியுடன் காங்கிரஸ் சமரசம் செய்ய கொள்ளாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்துகு்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார்.

அப்போது ‘‘வரும் தேர்தல் டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டியாக இருக்கும் என்று கூறிய அவர், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். மக்கள் மத்தியில் உழைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இளைஞர்களுக்காக போராடுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும்’’ கூறினார்.

முன்னதாக வாரங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி செய்வதையே பாஜக விரும்புகிறது. தெலங்கானா முதல்வர் முறைகேடாக சொத்து குவித்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காததே இதற்கு ஆதாரம்.

தெலங்கானா மாநிலத்தை ஒரு முதல்வர் ஆளவில்லை. ஒரு ராஜா (மன்னர்) தான் ஆட்சி செய்கிறார். அவரது குடும்பம் தான் ஆட்சி செய்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் காங்கிரஸ் மற்றும் ஆளும் டிஆர்எஸ் இடையே தான் நேரடிப் போட்டிஇருக்கும்.

தெலுங்கானா கனவு உருவானபோது முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என்று காங்கிரஸ் கனவு செய்தது. ஆனால் அந்த கனவை ஒருவர் அழித்துவிட்டார். அவர் கேசிஆர். ஊழல் டிஆர்எஸ் உடன் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது. ஒரு குடும்பம் பயன்பெற மட்டும் தெலங்கானா உருவாகவில்லை.

தெலங்கானாவுக்கு துரோகம் செய்த கட்சியுடன் காங்கிரஸ் சமரசம் செய்ய கொள்ளாது. அந்த கட்சியை வீழ்த்துவதே காங்கிரஸின் இலக்காகும். தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். காங்கிரஸுக்கும், டிஆர்எஸ்-க்கும் இடையே நேரடிப் போட்டி. தேர்தலில் டிஆர்எஸ்-ஐ வீழ்த்துவோம்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE