மத்தியப்பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி 

By செய்திப்பிரிவு

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தூர் நகரின் ஸ்வர்ண பாக் காலனியில் இரண்டடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் இன்று (மே 7) அதிகாலை 3.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலை நேரம் என்பதால் அந்த குடியிருப்பிலிருந்து மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது திடீரென பிடித்த தீ அருகிலிருந்த இருச்சக்கர வாகனங்களுக்கும் பரவியது. பின்னர் கட்டிடம் முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கட்டிட உரிமையாளர் அன்சார் படேலை போலீஸார் கைது செய்தனர். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் காலை 6 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்பு முழுமையாக சேதமடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE