கணவர் அடித்து கொலை செய்யப்பட்டபோது மனிதாபிமானமில்லா மனிதர்கள் செல்போனில் படம் பிடித்தனர்: ஆணவக்கொலையால் துவண்டு போன மனைவி குற்றச்சாட்டு

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: வேற்று மதத்தை சேர்ந்தவரை தங்கை திருமணம் செய்துக்கொண்டதை சகிக்காத அண்ணன், நடுரோட்டில் புது மாப்பிள்ளையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள், தாக்குதலை தடுக்காமல் செல்போன்களால் படம்பிடித்தனர். மனிதாபிமானமில்லாத மனிதர்களிடம் உதவியை நாடியதற்கு பதில், கொலை சம்பவத்தை தடுக்க வேறு ஏதாவது செய்திருக்கலாம் என காதல் மனைவி கண்ணீரோடு குமுறுகிறார்.

ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜு. இவரும் பக்கத்து கிராமமான கன்பூர் கிராமத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

இதனிடையே நாகராஜுவுக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் சேல்ஸ் மேன் பணி கிடைத்தது. திருமணம் செய்துக்கொண்ட பின்னர், இருவரும் விசாகப்பட்டினம் சென்று 2 மாதம் வசித்தனர். பிரச்சினை ஏதும் ஏற்படாததால், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் குடியேறினர். இதையறிந்த சுல்தானவின் சகோதரர் சையத் மோபின் அகமது, மற்றும் அவரது நண்பர் மசூத் அகமது ஆகிய இருவரும் கடந்த புதன் கிழமையன்று, சூரூர்நகர் பகுதியில் சுல்தானவையும், அவரது கணவரையும், பைக்கில் வந்து வழிமறித்தனர்.

பின்னர், நாகராஜுவை இரும்பு கம்பியால் தாக்கினர். தடுக்க வந்த சுல்தானாவை கீழே தள்ளி விட்டனர். தனது கணவர், தனது கண் முன் படு பயங்கரமாக தாக்கப்பட்டுவதை கண்டு அலறி துடித்த சுல்தானா, அங்கு கூடிய பொதுமக்களின் கால்களை பிடித்து காப்பாற்றும்படி கெஞ்சினார். ஆனால், யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. சிலர் தங்களது செல்போன்களில் கொலை சம்பவத்தை படம் பிடித்தனர். சுமார் 10 நிமிடங்கள் வரை இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால், மண்டை உடைந்து ரத்தம் கசிய நாகராஜு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பேட்டியளித்த சுல்தானா, ‘‘மனிதாபிமானம் இல்லாத மனிதர்களை நம்பியதற்கு பதில், நான் வேறு ஏதாவது செய்திருந்தால், எனது கணவரை ஒரு வேளை காப்பாற்றி இருக்கலாம்’’ என வேதனையுடைன் கூறினார்.

கொலை குற்றவாளிகள் இருவரையும் சுரூர்நகர் போலீஸார் கைது செய்தனர். நேற்று முன் தினம் இரவு நாகராஜுவின் சடலத்திற்கு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தபோது அவர்கள் வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதக்கலவரம் ஏற்படலாம் என்ற அச்சத்தால் சுரூர் நகரிலி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொலையாளிகளுக்கு சட்டப்படி தூக்கு தண்டனை வாங்கித்தருவோம் என எல்.பி நகர் போலீஸ் ஆணையர் சன்ப்ரீத் சிங் உறுதியளித்த பின்னர், நாகராஜுவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். நாகராஜுவின் இறுதி சடங்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE