வாரணாசி கியான்வாபி மசூதி வளாகத்தில் சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க கோரிய மனு - பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற குழு களஆய்வு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. இதை, காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்திலுள்ள முக்தி மண்டபத்திலிருந்த படி தரிசிக்க வேண்டும்.

இந்த சுவர் மசூதி மற்றும் விஸ்வநாதர் கோயிலுக்கு இடையே அமைந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தினால், 1991 முதல் வருடம் ஒருமுறை மட்டும் சிங்கார கவுரி அம்மனுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், அம்மனுக்கு அன்றாடம் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, 2012 ஆகஸ்ட் 18-ல் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாரணாசியின் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் விசாரிக்கும் இம்மனுவை டெல்லி வாசிகளான 5 பெண்கள் அளித்திருந்தனர். இதில், ராக்கி சிங், மஞ்சு வியாஸ், சீதா சாஹு, ரேகா பாதக் மற்றும் லஷ்மி தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வழக்கில் சிங்கார கவுரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் கடந்த மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதற்காக, மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் நடைபெறும் கள ஆய்வில் வழக்கின் அனைத்து தரப்பில் 36 பேர் பார்வையாளர்களாகவும் இடம்பெற அனுமதிக்கப்பட்டனர். இந்து, முஸ்லிம்கள் சார்பில் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய பல மூத்த வழக்கறிஞர்கள் வந்திருந்தனர்.

நேற்று மாலை 4 மணிக்கு கியான்வாபி மசூதி வளாகத்தினுள் கள ஆய்வு தொடங்கியது. முன்னதாக, அஞ்சுமன் இன்த ஜாமியா மசூதி கமிட்டி சார்பில் இக்கள ஆய்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கத்திற்கு மாறாக வெள்ளிக்கிழமையின் சிறப்பு தொழுகைக்காக நேற்று ஏராளமான முஸ்லிம்கள் கியான்வாபிக்கு வந்திருந்தனர். இதன் காரணமாக, போலீஸார் குவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த களஆய்வு மீதான அறிக்கை மே 10-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

முகலாயப் பேரரசர் அவுரங்க சீப்பால் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தின் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. இதனால், கியான்வாபி மசூதியும் பிரச்சினையாக்கப்பட்டு வருகிறது. இந்த கள ஆய்விற்கு தடை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 18-ல் உபி அரசு மற்றும் கியான்வாபி மசூதி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE