‘‘வயநாடு வருகிறேன்’’ - மலையாளத்தில் ட்வீட் செய்த ஸ்மிருதி இரானி: 2024-ல் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டி?

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கோட்டையான அமேதியில் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி இன்று வயநாடு தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். வயநாட்டில் ஸ்மிருதி இரானி சுற்றுப் பயணம் செய்வதன் மூலம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் பாஜக வேட்பாளராக களமிறங்க கூடும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 3 முறை எம்.பி.யாக ராகுல் காந்தி இருந்துள்ளார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டார். எனினும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அவர் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை வீழ்த்தினார். இது காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்மிருதி இரானி தற்போது மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் வயநாட்டில் வளர்ச்சித் திட்டங்களை அவர் ஆய்வு செய்கிறார்.

மலையாளத்தில் ட்வீட்

இதுதொடர்பாக ஸ்மிருதி இரானி நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘வணக்கம் வயநாடு! மாவட்ட வளர்ச்சி தொடர்பான கூட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகிறேன். நாளை சந்திப்போம்!’’ எனக் கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானியின் வயநாடு பயணத்தின் போது அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிகிறார். இதன் தொடர்ச்சியாக பழங்குடியின தலைவர்கள் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். கேரளாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி வயநாடு ஆகும்.

ஸ்மிருதி இரானி வயநாட்டின் பின்தங்கிய நிலை குறித்தும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அங்கு நடைபெறும் கூட்டத்தில் விரிவாகப் பேசுவார் என்றும் கேரள பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மிருதி இரானியின் வருகையால் 2019-ல் காங்கிரஸின் கோட்டையான அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்டதை போன்று வயநாட்டிலும் அவருக்கு கடும் நெருக்கடியை தர பாஜக தலைமை திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயநாட்டில் போட்டியா?

2024 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி களமிறக்கப்படக் கூடும் எனவும் தெரிகிறது. அதற்கான முன்னோட்டமாக ஸ்மிருதி இரானியின் வயநாடு பயணம் அமைந்துள்ளதாகவும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களை கைப்பற்றியது. வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிபி சுனீரை எதிர்த்து போட்டியிட்ட ராகுல் காந்தி பெறும் வெற்றி பெற்றார்.

பதிவான வாக்குகளில் 66 சதவீத வாக்குகளைப் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் துஷார் வெள்ளப்பள்ளிக்கு 7 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டதன் மூலம் கேரளாவில் அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறவும் வாய்ப்பாக அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்