மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்: மகாராஷ்டிர அரசுக்கு ராஜ் தாக்கரே மீண்டும் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் அதற்கான பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி மகாராஷ்டிராவில் புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது. அப்போது மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே,‘‘மகாராஷ்டிரா முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்’’ என்று முதன்முறையாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சூழலில் மே 1-ம்தேதி தொழிலாளர் தினத்தில்மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது: "உத்தர பிரதேச மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. அதை மகாராஷ்டிர அரசும் பின்பற்றலாமே? மகாராஷ்டிராவில் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் அதற்கான பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. மசூதிகளின் முன்பு இருமடங்கு ஒலியில் அனுமன் பாடல்களை ஒலிக்கச் செய்வோம்.

சரத்பவார் சாதி அரசியல்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சாதியை மையமாக வைத்து அரசியல் செய்கிறார்.அவர் நாத்திகர் என்று அவரதுமகள் சுப்ரியா சுலேவே நாடாளு மன்றத்தில் கூறியிருக்கிறார். ஆனால் அண்மைகாலமாக அவர் பூஜை, வழிபாடுகளில் பங்கேற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வாக்கு வங்கிக்காக நாடகமாட வேண்டாம்" இவ்வாறு அவர் பேசினார்.

வரும் ஜூன் 5-ம் தேதி ராஜ் தாக்கரே அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதை முன்னிறுத்தி தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘‘அயோத்தி செல்வோம் வாருங்கள்’’ என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே ராஜ்தாக்கரே நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மே 3-ம் தேதி ரம்ஜான்கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மசூதிகளின் முன்பாக அனுமன் பாடல்களை ஒலிபரப்ப வேண்டாம், பதற்றத்தை ஏற்படுத்தவேண்டாம். முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக ரம்ஜான் கொண்டாடட்டும். மசூதி ஒலிபெருக்கி விவகாரம் மதம் சார்ந்தது கிடையாது. இது சமூகப் பிரச்சினை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ட்விட்டரில் அறிவிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE