புதுடெல்லி: காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையப் போவதாக பரபரப்பு நிலவிய நிலையில் அதற்கு தற்போது முற்றுபுள்ளி வைக்கப்பட்டு விட்டது. அதேசமயம் அவர் கட்சியில் சேராமல் போனது ஏன் என்றும், அவர் அளித்த பரிந்துரை சோனியா காந்தி மற்றும் நேரு குடும்பத்தினரையே மிரள செய்துள்ளது பற்றியும் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை மீண்டும் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் இணையக்கூடும் எனத் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார்.
கட்சியில் இணைவது பற்றி மட்டுமின்றி காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பாகவும் அவர் கட்சித் தலைமைக்கு பரிந்துரை அறிக்கையை அளித்தார். பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜியா சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் சோனியா காந்தி அமைத்தார்.
காங்கிரஸில் சேரவில்லை
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மிஷன் 2024 திட்டத்தையும் அவர் முன் வைத்தார். இதுபற்றி அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது.
பிரசாந்த் கிஷோர் தெலங்கானா ராஷ்ட்ர சமதிக்கு ஆலோசனை வழங்குவதை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு ஒரு கட்சிக்கு ஆலோசனை கூறும் நபரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டாம் என அக்கட்சியின் மூத்த தலைவர்களும் கட்சித் தலைமையிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த குழப்பமான சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் 'எம்பவர்டு ஆக்ஷன் குரூப் 2024' உருவாக்கப்பட்டது. அவரைக் கட்சியில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்தார். அதோடு அவரை அந்த குழுவிலும் இருக்குமாறு சொல்லியிருந்தார். ஆனால், அதனை பிரசாந்த் கிஷோர் நிராகரித்துள்ளார். கட்சிக்கு அவர் கொடுத்த ஆலோசனைகளுக்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்தார்.
"காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் நிராகரித்தேன். நான் கட்சியில் இணைவதை விடவும் அமைப்பு சார்ந்த பிரச்சினைகளை சீர் செய்வது தான் மிகவும் அவசியம்" என பிரஷாந்த் கிஷோரும் தெரிவித்து இருந்தார்.
பிரசாந்த் கிஷோரின் திட்டம் என்ன?
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிய பரிந்துரை அறிக்கை தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து விரிவான அறிக்கையை பிரசாந்த் கிஷோர் முன் வைத்துள்ளார்.
அதன்படி காங்கிரஸ் 370 இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும், சில மாநிலங்களில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உத்தரபிரதேசம், பிஹார் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2024 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸை மீண்டும் பலப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாகவும் அவர் பேசியுள்ளார். காங்கிரஸில் சில முக்கிய மாற்றங்களை அவர் பரிந்துரைத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது இரண்டு மாற்றங்கள்.
திட்டம்-1
முதலாவது திட்டத்தின்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி தொடரலாம். அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவராக நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர் கட்சி விவகாரங்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். கட்சியின் அன்றாட செயல்பாடுகளை அவரிடம் விட்டு விட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் கட்சிக்கு வேறு ஒருவரை நேரடியாக தலைவராக நியமிப்பதை நேரு குடும்பத்தினர் விரும்பவில்லை என்றால் அதற்காக 2-வது திட்டத்தை செயல்படுத்தலாம். முதல் திட்டம் நேரு குடும்ப உறுப்பினர்களுக்கு விரும்பம் தராது என்பதால் அடுத்த திட்டத்தையும் முன் வைத்துள்ளார்.
திட்டம்-2
2-வது திட்டத்தின்படிசோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும். அதேசமயம் நேரு குடும்பத்தைச் சேராதவர் செயல் தலைவராக நியமிக்க வேண்டும். அவர் கட்சியின் அன்றாட பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பாஜகவில் இருப்பது போன்று கட்சித் தலைவராக அவர் தீவிரமாக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் முழு நேரமும் ஈடுபட வேண்டும்.
ராகுல் காந்தியை பொறுத்தவரையில் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக செயல்பட வேண்டும் என்பது பிரசாந்த கிஷோரின் எண்ணம். இதன் மூலம் வரும் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்ற யோசனையையும் அவர் கூறியுள்ளார்.
யாருக்கும் விரும்பமில்லை
பிரியங்கா காந்திக்கு கட்சித் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படும் வகையில் ஒரு பதவியை உருவாக்கலாம். அதேசமயம் கட்சியின் நேரடி நிர்வாகியாக இல்லாமல் இருப்பது நலம் என்ற பரிந்துரையும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடும்ப அரசியல் என்ற வாதத்தை முறியடிப்பதுடன், கட்சியின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் முடியும் என்பது பிரசாந்த் கிஷோரின் கணிப்பு. இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பணியை கவனிக்க ஏதுவாக கட்சியில் பதவியை பெற பிரசாந்த் கிஷோர் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
என்ன செய்யப்போகிறது தலைமை?
ஆனால் காங்கிரஸில் அவர் இணைவதை இருதரப்புமே மகிழ்ச்சியடைய வில்லை. அதற்கு மாறாக நண்பனாக இருந்து வெளியே இருந்து கூறிய அறிவுரைக்கு நன்றி என்று அக்கட்சி கூறி விட்டது. ஒரு வகையில், அவரது திட்டம் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரு குடும்பத்தின்பிடி தளர்வதை அந்த குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த கட்சியில் உள்ள எவருமே விரும்பவில்லை. இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையும் சூழல் ஏற்படவில்லை. அதேசமயம் அவர் அளித்த பரிந்துரையை ஏற்று கட்சியில் மாற்றங்கள் நடக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago