தஞ்சை தேர் விபத்து |  பிரதமர் மோடி இரங்கல்; உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தஞ்சையில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தஞ்சாவூரில் நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடுகிறேன். பிரதமர் அலுவலக நிவாரண நிதியிலிருந்து இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் " என்று அறிவித்துள்ளார்.

இதுபோலவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘தஞ்சாவூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்’’ எனக் கூறியுள்ளார்.

விபத்து நடந்தது எப்படி? தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று (ஏப்.26) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து தேர் இழுத்து வரப்பட்டது.

தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர். புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர்.சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த எம்.ரவிச்சந்திரன் (48), ஆர்.கலியமூர்த்தி (40), கே.ஹரிஷ் ராம் (10), எம்.நித்தீஷ் ராம் (13), ஏ.மாதவன் (22), டி.மோகன் (54), என்.விஜய் (23), எம்.அரசு (19), ஜி.விக்கி (21), திருஞானம் (36), வி.ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி.கௌசிக் (13), எஸ்.பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

இதேபோல மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கள்ளபெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகிவிட்டது எனத் தெரிவித்தனர்.

ஒருவர் கவலைக்கிடம்: தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தஞ்சை பயணம்: இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திருச்சி செல்கிறார். அங்கிருந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் சாலை மார்க்கமாக தஞ்சை செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடுபங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்