டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் அடையாளம்: ப.சிதம்பரம்

By செய்திப்பிரிவு

டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டுமொத்த சீர்கேட்டின் அடையாளம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், "டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டுமொத்த சீர்கேட்டின் அடையாளம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற புதிய உத்தியின் மூலம் முஸ்லிம்கள், ஏழைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சம்பவ இடத்துக்கு காங்கிரஸ் குழு தாமதமாகச் சென்றதாகவும், ஓவைசியும் பிரந்தா காரத்தும் தான் முதலில் சென்றதாகவும் கூறுகின்றனர். யார் யார் சென்றனர்? முதலில் யார் சென்றனர்? என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் காங்கிரஸ் குழு அங்கு சென்றது. ஒருவேளை அதில் தாமதமிருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

முஸ்லிம்களை எப்போதும் காங்கிரஸ் சமாதானப்படுத்திக் கொண்டே இருப்பதாக பாஜக விமர்சிப்பதால் தாமதம் ஏற்பட்டதாக கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன? நான், சட்டம் ஒழுங்கு மீறல் பிரச்சினையைப் பேசுகிறேன். நீங்கள் அதில் மதச் சாயம் பூசாதீர்கள்.

மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை. அது தான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை மதிப்பீடும் கூட. எங்களுக்கு மதச்சார்பின்மை இருந்தால் மட்டும் போதாது. அதன் மீது ஒரு அத்துமீறல் நடக்கும்போது ஒவ்வொருவரும் மதச்சார்பின்மை மொழியில் பேச வேண்டும். அத்துமீறலுக்கு எதிராகப் போராட வேண்டும்.

ஒவ்வொரு நகராட்சியிலும் சரி, பஞ்சாயத்திலும் சரி ஆக்கிரமிப்புகள் குறித்த தகவல் சேகரிப்பு தொடங்கி, சட்டவிரோத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது அகற்றுவது என எல்லாவற்றிற்குமே சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால், ஜகாகிங்புரியில் அப்படி ஏதும் பின்பற்றுள்ளதா? அதனால் தான் இதை சட்டம், ஒழுங்கு விதிமீறல் எனக் கூறுகிறோம்" என்றார்.

சம்பவப் பின்னணி: டெல்லியில் உள்ள ஜஹாங்கிபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த வன்முறையில் போலீஸார் உட்பட பலர் காய மடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். வன்முறைக்கு முக்கிய காரணமான அன்சர் என்பவர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அன்சர் உட்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் காலை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தையும் மகாராஷ்டிரா கோரேகான் சம்பவத்தையும் தொடர்புபடுத்தி பாஜக புல்டோசர் பாலிடிக்ஸ் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE