இந்தியா போஸ்ட் குலுக்கல்; பரிசு வழங்குவதாக சமூகவலைதளங்களில் போலி யுஆர்எல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குலுக்கலில் பரிசுகள் வழங்கப்படுவதாக கூறி போலியான பெயர்களில் வாட்ஸ் அப் உட்பட சமூகவலைதளங்களில் வலம் வரும் போலி யுஆர்எல்-களை நம்பி பதிலளிக்க வேண்டாம் என பொதுமக்களை தபால்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்தியா போஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மைக்காலமாக, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களின் மூலம், சில ஆய்வுகள், வினாடி-வினா வழியாக அரசு மானியங்கள், பரிசுகள் வழங்கப்படுவதாக யுஆர்எல்-கள் வைரலாகி வருவதை இந்தியா போஸ்ட் கண்காணித்து வருகிறது.

இந்தியா போஸ்ட் பெயரில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்தியா போஸ்ட் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், எந்தவித மானியத்தையோ, ஊக்கத்தொகைகளையோ வழங்கவில்லை என்றும் மக்களுக்கு தெரிவிக்கிறது.

இதுபோன்ற தவறான, போலியான குறுந்தகவல்கள் மற்றும் அறிவிப்புகளைப் பெறும் மக்கள் இதனை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதை நம்பி பிறந்த தேதி, வங்கி கணக்கு எண்கள், தொலைபேசி எண்கள், பிறந்த இடம், ஒரு முறை வழங்கப்படும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இத்தகைய போலி தகவல்களைப் பரப்புவோர் மீது இந்தியா போஸ்ட் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் இதுபோன்ற தவறான, போலியான குறுந்தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை நம்பி அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்தியா போஸ்ட் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஃபாஸ்ட் செக் பிரிவு, சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இந்த யுஆர்எல்-கள்/வலைதளங்கள் போலியானவை என்று அறிவித்துள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE