பாஜக சார்பில் 2 முறை எம்பியாக இருந்து, இந்தமுறை போட்டியிட்ட வேட்பாளர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் சிபி.ராதாகிருஷ்ணன். இவர் முன்னாள் மாநில தலைவராகவும் நாடாளு மன்ற நிலைக்குழு (ஜவுளித்துறை) தலைவராகவும் இருந்தவர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்து, சில எதிர்பார்ப்புகளுடன் டெல்லியின் புதிய தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டிருந்த அவர் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டி.
தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன?
பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததாக நான் கருதவில்லை. பாஜக தனித்து போட்டியிட்டபோது இருந்ததை விட இப்போது வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், இதற்கு முன் இருந்த கூட்டணியின் நிலை வேறு. இந்த தேர்தலில் இருமுக்கிய திராவிட கட்சிகளுக்கு எதிராக கூட்டணி அமைத்தோம். இதில், கன்னியாகுமரி, தருமபுரி, வேலூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஏழு இடங்களில் திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறோம்.
1967-க்குப் பிறகு ஒரு திராவிட கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது என்பது, தமிழக அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் ஆகும். அத்துடன், அதிமுகவை இரண்டு தொகுதிகளில் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்று இருப்பதும் ஐந்து தொகுதிகளில் இரண்டாவது இடத்திற்கு வந்திருப்பதையும் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்.
தமிழகத்தில் உண்மையிலேயே மோடி அலை வீசியதா?
நிச்சயமாக வீசியது. மோடி அலை இல்லை எனில், பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்காது. இது தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் எதிர்ப்பு அலையும் அல்ல. ஏனெனில், நாம் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த பிரச்சினைகள் அனைத்தும் தேசியம் சம்மந்தப்பட்டது. இதில் குஜராத்தில் மோடி கண்டிருப்பதைப் போன்ற பொருளாதார வளர்சி, நதிகள் இணைப்பு, தடையில்லா மின்சாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்துவதற்கு வாக்களிக்கும்படி கேட்டோம். இதற்காக, எங்களுக்கு புதிய வாக்கு வங்கி இந்தக் கூட்டணியின் மூலம் உருவாகி உள்ளது.
உங்கள் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரான பொன்.இராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட அதிகமாகப் பெற்றபோதும் நீங்கள் தோல்வி அடைந்திருக்கிறீர்களே?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகத்திலேயே இரண்டாவது இடத்தை பல்லடம் தொகுதியும் மூன்றாவது இடத்தை கவுண்டம்பாளையம் தொகுதியும் பெற்றது. ஆனால் இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வித்தியாசத்தை மிகப்பெரிய அளவில் குறைத்திருக்கிறோம்.
மூத்த பத்திரிகையாளர் சோ, தனது பத்திரிகையில் பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கூறியிருந்ததை பாஜக மறுக்காதது ஏன்?
சோ சொன்னதை அவருடைய தனிப்பட்டக் கருத்துதான் என ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, பாஜக அந்தக் கருத்தில் ஆதிக்கம் செலுத்த முயல்வது அவரது கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது போலாகிவிடும்.
உங்களுடன் கூட்டணி வைத்த விஜயகாந்துக்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் எனக் கூற முடியுமா?
நிச்சயமாக அப்படிக் கூற முடியாது. அரசியல் சூழ்நிலைக்கேற்ப கட்சிகளின் வாக்கு சதவிகிதம் கூடுவதும், குறைவதும் இயற்கை. இந்தமுறை பெரிய வெற்றி பெற்ற அதிமுக 2 தேர்தல்களுக்கு முன்பு பெரிய படுதோல்வியை சந்தித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும்போது தமிழக பாஜக தலைவர்களின் கருத்தும் தேசிய தலைவர்களின் கருத்தும் வேறுபட்டது ஏன்?
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர இராசாயனத் தாக்குதல்கள் போர்க்குற்றம் ஆகும். அவற்றை செய்தவர்கள் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள நல்ல சிந்தனையாளர்களின் கருத்தாகும். இதை மத்தியில் மலர்ந்திருக்கிற நல்ல சிந்தனையுள்ள அரசும் ஏற்றுக் கொள்ளும்.
அமைச்சராகி விட்ட பாஜகவின் மாநில தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனுக்கு பதில் வேறு தலைவர் அமர்த்தப்படுவது எப்போது?
இதற்கான பூர்வாங்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கட்சியின் தேசிய தலைவரை நியமித்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.
கன்னியாகுமரி, தருமபுரி, வேலூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஏழு இடங்களில் திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறோம். அதிமுகவை இரண்டு தொகுதிகளில் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்று இருக்கிறோம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago