டெல்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்; மீறினால் ரூ.500 அபராதம்: கரோனா தொற்று உயர்வு எதிரொலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அங்கு பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 3-வது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் வழக்கமான முறைக்கு இயல்பு வாழ்க்கை மாறி வருகிறது. நாடுமுழுவதும் முககவசம் அணிவது சட்டரீதியாக கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. எனினும் மக்கள் சூழல் கருதி முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உருமாறிய கரோனா எக்ஸ்இ வைரஸ் சீனா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றஅச்சம் எழுந்துள்ளது. ‘‘கரோனா பிரச்சினை முடியவில்லை. எப்போது புதிய வைரஸ் பரவும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் கைவிடக்கூடாது’’ என்று மத்திய அரசும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் ஹரியாணா, டெல்லி, குஜராத் உட்பட சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் உ.பி. ஹரியாணா ஆகிய மாநிலங்களில் டெல்லியைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் தொற்று எண்ணிக்கை 2 இலக்கத்தில் இருந்தநிலையில் தற்போது 3 இலக்கமாக மாறியுள்ளது. ஏப்ரல் 11 மற்றும் 18 தேதிகளுக்கு இடையில் டெல்லி தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்வு கண்டது. டெல்லியில் நேற்று 632 புதிய கோவிட் தொற்று எண்ணிக்கையுடன் 4.42% நேர்மறை விகிதமும் பதிவாகியது. திங்களன்று, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 501 ஆகவும், நேர்மறை விகிதம் 7.72% ஆகவும் இருந்தது.

டெல்லியில் கரோனா பாதிப்புகள் குறைந்த சூழலில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கினர். தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியானது. இதனால், அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் பள்ளிகள் மூடப்படவில்லை.

இந்தநிலையில் டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அங்கு பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

பள்ளிகள் வகுப்புகளைத் தொடர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. எனினும் பள்ளிகளில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூகக் கூட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அதேசமயம் அனைத்து கூட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு அமல்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE