மசூதிகளில் ஒலிபெருக்கி இருக்க கூடாது: மே 3 வரை ராஜ் தாக்கரே கால கெடு

By செய்திப்பிரிவு

புனே: கடந்த 2-ம் தேதி மகாராஷ்டிராவில் புத்தாண்டு (குடி பட்வா) கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த சூழலில் புனேவில் நேற்று அவர் கூறியதாவது:

கூம்பு ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது சட்டவிரோதம். வரும் மே 3-ம் தேதிக்குள் மகாராஷ்டிரா முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் எங்கள் கட்சி சார்பில் மசூதிகளின் முன்பாக அனுமன் பாடலை ஒலிபெருக்கி மூலம் 5 முறை ஒலிக்கச் செய்வோம். இந்த விவகாரத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்பதை மகாராஷ்டிர அரசுக்கு திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறோம். சட்டத்தைவிட மதம் பெரியது கிடையாது. இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். வன்முறையை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டால் எங்களது மதத்தின் பாடல்களையும் அவர்களை கேட்க செய்வோம். யாருடைய மதவழிபாட்டுக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. வரும் ஜூன் 5-ம் தேதி அயோத்தியில் வழிபாடு நடத்த உள்ளேன். இவ்வாறு ராஜ்தாக்கரே தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE