சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளைச் சிறுகச் சிறுக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

சமையல் எரிவாயுவை சிலிண்டருக்கு மாதாமாதம் ரூ.5-ம், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 50 காசுகள் முதல் 1 ரூபாய் வரை மாதாமாதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சமையல் எரிவாயு, மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய இரண்டு எரிபொருளுக்கு மானியம் அளிக்கப்படும் வகையில் அரசுக்கு ரூ.80,000 கோடி இழப்பு ஏற்படுவதை ஈடுகட்ட இந்த முடிவுக்கு அரசு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டீசல் மற்றும் பெட்ரோலுக்குச் செய்ததை தற்போது மோடி அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்குச் செய்ய முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14.2 கிலோ காஸ் சிலிண்டருக்கு மானியம் தற்போது ரூ.432.71 கோடியாக உள்ளது. ஆகவே சிலிண்டருக்கு மாதாமாதம் ரூ.5 அதிகரித்தால் 7 ஆண்டுகளில் மானியத்தினால் அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டிவிடலாம் என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அரசியல் தலைமை கறாரான முடிவெடுத்தால் எல்.பி.ஜி. விலை மாதாமாதம் சிலிண்டருக்கு ரூ.10 கூட அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் டீசல், எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியம் ரூ.115,548 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயுக்கு அளிக்கப்படும் மானியம் மட்டுமே ரூ.50,324 கோடி.

ஆகவே சிறுகச் சிறுக விலையை ஏற்றினால் அரசுக்கு மானியம் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்டிவிடலாம் என்று கணக்கிட்டுள்ளது மத்திய அரசு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு அதன் 10 ஆண்டுகால பொருளாதாரக் கொள்கைகளும் ஒரு பெரும் காரணமாக இருக்கும்போது அதே விலை உயர்வு பொருளாதாரக் கொள்கைகளை பாஜக அரசும் கடைபிடிக்குமேயானால் ஆட்சி மாற்றத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்ன பெரிய வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE