குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோருடன் சோனியா ஆலோசனை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அடுத்து வரவிருக்கும் குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சார வியூகம் அமைப்பது தொடர்பாக தேர்ல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்களில் முறையே திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூக நடவடிக்கை தொடர்கிறது. இவரை அடுத்து வரவிருக்கும் குஜராத், இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரஷாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் நேற்று நேரம் ஒதுக்கி இருந்தது. இந்த ஆலோசனை, கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் எண் 10, ஜன்பத் சாலை வீட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், திக் விஜய்சிங், அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரசாந்த் கிஷோர் தனது பிரச்சார வியூகங்களை முதன்முறையாக குஜராத்தில் பாஜகவுக்கு அமைத்திருந்தார். இதில் அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வாகி இருந்தார். பிறகு பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட 2014 மக்களவைத் தேர்தலிலும் பிரசாந்த் வியூகம் அமைத்து அதில் வெற்றி கிடைத்தது.

எனவே, குஜராத் தொகுதிகளில் நன்கு அனுபவம் பெற்ற பிரசாந்திடம் காங்கிரஸ் தனக்கான தேர்தல் வியூகம் அமைக்கும் பொறுப்பை அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் வெற்றியை பொறுத்து பிரசாந்த், 2024 மக்களவை தேர்தலுக்கும் காங்கிரஸுக்காக பணியாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் புதிதாகத் தொடங்கியிருக்கும் டிஜிட்டல் முறையிலான வெளிப்படையான உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், ஏற்கெனவே இருப்பவர்களுடன் சேர்த்து, நாடு முழுவதிலும் சுமார் 2.6 கோடி உறுப்பினர்கள் காங்கிரஸில் சேர்ந்துள்ளனர்.

இதன்மூலம், போலி உறுப்பினர்கள் கட்சியில் நீட்டிக்க முடியாத நிலை உள்ளது. இதை வைத்து, ஆகஸ்டில் அகில இந்திய காங்கிரஸுக்கு புதிய தலைவராக ராகுலும் டிஜிட்டல் வாக்கெடுப்பில் வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதனிடையே, தனது எதிர்கால அரசியல் முடிவை பிரசாந்த், மே மாதம் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு பிறகு பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்தார் பிரசாந்த். இதில் கிடைத்த வெற்றிக்கு பின் அவர் பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 2017-ல் நிதிஷ் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு தொடர்ந்து எதிர்ப்பு காட்டிவந்த பிரசாந்த் 2020-ல் நிதிஷால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

விரைவில் புதிய அறிவிப்பு

எனினும், மீண்டும் ஒரு கட்சியில் இணைந்து அரசியல் செய்ய விரும்பும் பிரசாந்த் அதற்காக, காங்கிரஸில் சேர விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காகவும் காங்கிரஸ் தலைவர்களுடன் அவரது ஆலோசனை இருந்ததாகத் தெரிகிறது. எனவே, நேற்றைய ஆலோசனையை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பு காங்கிரஸில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE