ராமேஸ்வரத்திலும் 108 அடி உயர ஹனுமன் சிலை அமைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் மோர்பி என்ற இடத்தில் உள்ள பரம்பூஜ்ய பாபு கேஷ்வானந்த் ஆசிரமத்தில், 108 அடி உயர ஹனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வலிமை, தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் உருவகமாக ஹனுமன் திகழ்கிறார்.

நாட்டின் நான்கு திசைகளிலும், ஹனுமன் சிலை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் சிலை சிம்லாவில் கடந்த 2010-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இரண்டாவது சிலை தற்போது குஜராத்தின் மோர்பியில் அமைக்கப்பட்டுள்ளது. 3வது சிலை அமைக்கும் பணி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 4வது சிலை, மேற்கு வங்கத்தில் அமைக்கப்படும்.

ராமர் கதைகள் நிகழ்ச்சி, நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. எந்த மொழியில் இந்த கதை இருந்தாலும், கடவுள் பக்தியால் இது நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது. இதுதான் நமது ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பலம்.

தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்டுவதில் ராமர் திறமையானவராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பணியையும் திறம்பட செய்தார். நாம் ஒவ்வொருவரின் முயற்சியும் இதுதான். அனைவருடனும், அனைவரின் முயற்சி என்பதற்கு ராமரின் சரித்திரம் ஒரு சிறந்த உதாரணம். ஹனுமனுக்கும் இதில் முக்கிய பங்குண்டு.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE