திடீர் திருப்பம்: சோனியா, ராகுலுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு; குஜராத்தில் வெற்றி பெற புதிய வியூகம் - 2024 தேர்தலில் மாறும் திட்டம்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வியூகப் பணி பிரசாந்த் கிஷோர் வசம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவராகினார்.

ஆனால், கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக பணிகளை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்தார். இதன் பின்னர் காங்கிரஸில் அவர் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை.

காங்கிரஸ் மீது விமர்சனம்

அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமின்றி பாஜகவை வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் வெல்லும் திறன் காங்கிரஸுக்கு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நேரு குடும்பத்தினரே இருக்க வேண்டிய தேவையில்லை எனவும் காட்டமாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பல விமர்சனங்களை முன் வைத்தார். கடந்த ஆண்டு லக்கிம்பூர் கேரி சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கேரிக்கு செல்லும் வழியில் தடுத்து வைக்கப்பட்டபோது பிரச்சினைகளை சரியாக எதிர்கொள்ள தெரியவில்லை என பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்தார்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் அணியை கட்டியமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் ஏற்கெனவே இறங்கியுள்ள நிலையில் அவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். இதனால் பாஜகவுக்கு எதிரான புதிய அணியில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் சனிக்கிழமை உயர்மட்ட காங்கிரஸ் கூட்டம் நடந்தது. பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றுமு் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜியா சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் அண்மை தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகள் குறித்த விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்க ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் மீண்டும் அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

குஜராத் தேர்தல் வியூகம்

குறிப்பாக வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணியை பிரசாத் கிஷோர் கவனிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக குஜராத் தேர்தலில் அவரது பங்கு முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பிரசாந்த் கிஷோரை களமிறங்க காங்கிரஸ் தலைமை முடிவு செ்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக தொழிலதிபர் லியுவா படேல் சமூக தலைவர் நரேஷ் பட்டேல் ஆகியோரில் ஒருவரை முன்னிறுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவுதாகவும், இதற்கும் காங்கிரஸ் தலைமை ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. 2024 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில் பிரசாந்த் கிஷோர் கூறும் ஆலோசனைகளை ஏற்க காங்கிரஸ் தலைமையும், நேரு குடும்பத்தினரும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்