புதுடெல்லி: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் என்ற இடத்தில் கட்ச் லேவா படேல் சமாஜ் என்ற தொண்டு அமைப்பு சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள முதல் தொண்டு நிறுவன பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இதுவாகும்.
இந்த மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நிலநடுக்கத்தால் புஜ் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்தப் பகுதியை பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர். இந்த மருத்துவமனை, ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதிகளை வழங்கும்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜன் அவுஷதி யோஜனா திட்டங்கள் மூலம் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பலன் பெறுகின்றன. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. சிறந்த மருத்துவ வசதி என்பது நோய்க்கான சிகிச்சை மட்டுமல்ல, அது சமூக நீதிக்கான அடையாளமும் ஆகும். தரமான, சிறந்த சிகிச்சையால் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்க முடியும்.
மத்திய அரசு திட்டத்தால் சாதாரண, நடுத்தர மக்களின் மருத்துவ செலவு ஆண்டுக்கு மொத்தமாக பல கோடி ரூபாய் அளவுக்கு மிச்சமாகிறது.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கொள்கையின்படி மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த கொள்கையால் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும்.
குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 9 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவக் கல்வியின் சூழல் மிகவும் மேம்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மற்றும் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கையும் ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண உதவிகளும் கிடைக்கச் செய்தது. 186 கோடி டோஸ்களுக்கு மேல் மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டோம். எனினும், தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் தோன்றிய யோகாவும் ஆயுர்வேதமும் கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தன. இந்தியாவின் மருத்துவகுணம் நிறைந்த மஞ்சளின் உபயோகத்தையும் அதன் மருத்துவ நலன்களையும் பற்றி கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். அதனால், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளிக்கும் இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.
உலக நாடுகளுக்கு ஆரோக்கியத்தின் வழிகாட்டியாக இந்தியா விளங்குகிறது. ஆரோக்கிய வாழ்வுக்காக ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கட்ச் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகமான பங்கேற்பை உறுதி செய்து உலக சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago