ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து - மீட்புப் பணி அனுபவங்களை ஆவணப்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ரோப்கார் விபத்தின் போது மீட்புப் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள், கற்ற பாடங்களை ஆவணப்படுத்துங்கள்’’ என்று பல்வேறு மீட்புப் படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பாபா வைத்தியநாத் கோயிலுக்கு செல்ல ரோப்கார் வசதி உள்ளது. இந்த ரோப் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். மேலும், 12 ரோப் கார்களில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கி பல மணி நேரம் தவித்தனர். அவர்களை மீட்க 2 நாட்கள் ஆனது. அந்தரத்தில் தொங்கிய ரோப் கார்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் பல்வேறு மீட்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்தித்தனர். அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். கடையில் அனை வரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், ரோப்காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில போலீஸார், ராணுவம், விமானப் படை, இந்தோ - திபெத்எல்லை பாதுகாப்புப் படை, உள்ளூர் நிர்வாகத்தினர், தன்னார்வலர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப்கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் அனைத்து மீட்புப் படையினர் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட்டு மக்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள். அந்த துணிச்சலான நடவடிக்கைக்கு அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கிறேன்.

இந்த விபத்து ஏற்பட்ட பிறகு அனைத்து மீட்புப் படை பிரிவினரும் மக்களை காப்பாற்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சிக்கல்கள், கற்ற பாடங்களை ஆவணப்படுத்துங்கள். அந்த அனுபவங்கள், பாடங்கள், மீட்புப் படையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி வழிகாட்டியில் சேர்க்கப்படும். மேலும், எதிர்காலத்தில் இதுபோல் பேரிடர் ஏற்படும் போது எளிதாக மக்களை காப்பாற்ற உங்கள் அனுபவங்கள், கற்ற பாடங்கள் உதவும்.

மக்கள் நம்பிக்கை

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது வேதனை அளித்தாலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் பணியும் மக்களை காப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. ஒவ்வொரு மீட்புப் படை சீருடையின் மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்கள் தவிக்கும் போது, உங்களைப் பார்த்தவுடன் இனி உயிருக்கு பயமில்லை என்று நம்புகின்றனர். அவர்களுக்கு புது நம்பிக்கை பிறக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

பின்னர் ரோப்கார் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு மீட்புப் படை தலைவர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மீட்புப் பணியின் போது ஏற்பட்ட சவால்கள் என்னென்ன என்று கேட்டறிந்தார். குறிப்பாக ரோப் கார்களில் சிக்கிய பெண்கள், குழந்தைகளை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிஷிகாந்த் துபே எம்.பி. உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE