திருவனந்தபுரம்: காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான 529 கிலோ மீட்டர் தூரத்தினை நான்கு மணிநேரத்தில் கடக்கும் வகையில் ‘கே ரயில் திட்டம்’ ஒன்றை வடிவமைத்துள்ளது கேரள அரசு. இதற்கு மத்திய அரசின் அனுமதியும் பெற்று பணி துவங்கியிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்காணோரின் வீடு, விவசாய நிலம் உள்ளிட்டவை பறிபோகும் வாய்ப்பு இருப்பதாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.
இந்தச் சூழலில் முன்னாள் கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா. ‘இந்து தமிழ்திசை’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இடதுசாரி அரசின் திட்டமிடப்படாத இந்த செயலால் மொத்தக் கேரள மக்களும் தங்கள் வீடு, நிலம் ஆகியவை பறிபோய்விடும் என அச்சத்தில் உள்ளனர். மக்கள் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இடதுசாரிகள் தங்கள் பாக்கெட்களை நிரப்பு வதில் குறியாக உள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மார்க்சிஸ்ட் உறுதியாக இருக்கிறது. இது இலங்கையின் பொருளாதார சூழலை கேரளாவுக்கும் உருவாக்கிவிடும்.
இந்தத் திட்டத்திற்காக வயல்வெளி, மலை, கால்வாய், ஏரி ஆகியவற்றை இஷ்டத்திற்கு அதன் போக்கினை மாற்றியமைக்கவும், உடைக்கவும் செய்வார்கள். இதனால் கேரளா இயற்கை பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக மாறும். இதை நீண்ட ஆய்வுக்குப் பின்பே கூறுகிறேன். மாநிலத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை கேரள அரசு எட்டு மீட்டர் உயரமும், முப்பது மீட்டர் அகலமும் கொண்ட ராட்சத சுவரை கே ரயில் பாதை என்னும் பெயரில் கட்ட முனைகின்றது. இருபுறமும் காங்கிரீட் சுவர்கள் கட்டி, மண் நிரப்பி நிலப்பரப்பை உயர்த்தி ரயில் பாதை கட்டப்படும். 292 கிலோ மீட்டருக்கு இப்படி சுவர்களை எழுப்புவதாக திட்ட அறிக்கை கூறுகிறது.
இதேபோல் 101 கிலோ மீட்டருக்கு சிறு குன்றுகளை வெட்டி புதிய வழித்தடம் உருவாக்கி கே ரயில் பாதை உருவாக்க உள்ளார்கள். அங்கும் அந்த காங்கிரீட் சுவர் இருக்கும். 11 கிலோ மீட்டருக்கு மலைகளை குடையப் போகிறார்கள். ஒட்டு மொத்த கேரளத்தின் வளத்தையும் இந்த கே ரயில் திட்டம் காவு வாங்கும். கூடவே இயற்கை கட்டமைப்புகளையும், நீர்பிடிப்புப் பகுதிகளையும் மிதமிஞ்சி இடையூறு செய்வதால் நிலச்சரிவு சம்பவங்களும் இனி அதிகரிக்கும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, இப்போது அரசு முன்மொழிந்திருக்கும் கே ரயில் திட்டப் பாதையில் 164 நீரியல் உணர்ச்சி மிகுந்த பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட நீராதாரங்கள் வருகின்றன. அவற்றை அரசு பொருட்படுத்தவே இல்லை. 529 கிலோமீட்டர் தூரத்துக்கு இப்படி ஒருதிட்டத்தை உருவாக்க எங்கே இருந்து பாறை, மண் கிடைக்கும்? அதன் பின்னாலேயே இயற்கை அழிப்பும் ஒளிந்திருக்கிறது. இத்திட்டத்திற்கு ரூ.63,941 கோடி செலவாகும் என டி.பி.ஆர் திட்ட அறிக்கை கூறுகிறது.
அதேநேரத்தில் நிதி ஆயோக் ரூ.1.24 லட்சம் கோடி, இந்தத்திட்டம் முடியும் போது செலவாகி இருக்கும் என சொல்கிறது. இதிலேயே முரண் இருக்கிறது. இத்திட்டத்திற்கு 10 சதவிகிதம் மத்திய அரசு வழங்குகிறது. 30 சதவீதம் மாநில அரசும், 7 சதவீத நிதி தனியார் பங்களிப்புடனும், மீதமுள்ள 53 சதவீத நிதி வெளிநாடு, உள்நாட்டு கடனில் வரும். இந்தத் திட்டத்திற்கு வெளிநாட்டுக் கடனுக்கும் மாநில அரசே உத்தரவாதம் அளிக்கவேண்டும். இது கேரளாவுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
கடந்த 6 ஆண்டு ஆட்சியில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தகேரளாவின் கடன் ரூ.3.10 லட்சம்கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று தன்மை கொண்ட மும்பை - அகமதாபாத் புல்லட்ரயிலை இடது சாரிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் இங்கே கே ரயில் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இது மக்கள் மத்தியில்அம்பலமாகிவிட்டது. மேற்கு வங்கத்தைப் போலவே கேரளத்திலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அகல மக்களே விரும்பும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வாறு ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago