மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு

By செய்திப்பிரிவு

கண்ணூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கடந்த ஏப்.6-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று (ஏப்.10) அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரியே அப்பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பொதுச் செயலாளர் பதவிக்கு இவர் தேர்வானார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுபுகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் இந்த மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கொண்ட புதிய மத்திய குழு , அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக, பிரகாஷ் காரத், பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், முகமது சலீம், பி.வி.ராகவலு, சூர்யகாந்த் மிஸ்ரா, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், சுபாஷினி அலி, ராமச்சந்திர தோம், அசோக் தவாலே, மற்றும் ஏ.விஜயராகவன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE