பள்ளிகளில் இந்தி கட்டாயம்: அமித் ஷா பேச்சுக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு 

By செய்திப்பிரிவு

இந்தியா : பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்றும், இந்தியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதற்கு வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய இந்த அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா, "இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். விரும்புபர்கள் தேர்வு செய்து கொள்ளும் மொழியாக இந்தி இருக்கட்டும். இந்தியை கட்டாயம் ஆக்கக் கூடாது. வட மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுகளிடம் பேச உள்ளோம்" என்றார். மிசோரம் மாநிலத்தின் இளம் மிசோ அமைப்பு, மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

அசாம் கிருஷக் முக்தி சங்ரம் சமிதி என்ற அமைப்பு, இந்த முடிவு அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகம், கூட்டாசி தன்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் பாஜக அரசு அசாம் மக்களுக்கு எதிராக செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது. இதைப்போன்று வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலக் கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE