இந்தியாவில் வறிய நிலை அகற்றப்பட்டுள்ளது: ஐஎம்எப் தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியாவில் வறிய நிலை அகற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. அதேபோல உணவு நுகர்வில் நிலவிய கடுமையான ஏற்றத்தாழ்வும் நீக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இத்தகைய முன்னேற்றமான சூழல் எட்டப்பட்டுள்ளதாக ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையை சுர்ஜித் பல்லா, அர்விந்த் விர்மானி, கரண் பாசின் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். வறிய நிலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் மிகக் குறைவு. அதேபோல இத்தகையோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானியங்கள் மற்றும் இலவச ரேஷன் வசதி உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. மேலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தகைய மானியங்கள் பெருமளவில் உதவியாக இருந்ததாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் ஏழை - பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாக சமீப காலமாக பல சர்வதேச அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால் கரோனா பெருந்தொற்று காலத்தில் இதற்கான இடைவெளி மிகவும் குறைந்து காணப்பட்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் கணிப்புப்படி 1.9 டாலருக்கும் குறைவான வாங்கும் திறன் கொண்ட மக்களை வறிய நிலையில் உள்ளவர்களாகக் குறிப்பிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நிலவரப்படி இப்பிரிவில் உள்ள மக்களின் எண்ணிக்கை 0.8 சதவீதமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதை நிபுணர்கள் தங்களது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரேஷன் மூலம் உணவு விநியோக முறை வறிய நிலையைப் போக்க உதவியுள்ளது. அத்துடன் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மேலும் அந்நிலையிலிருந்து கீழிறங்காமலிருக்கவும் உதவியுள்ளது.

ஒரு வருக்கு 5 கிலோ அரிசி வீதம் ஒரு குடும்பத்துக்கு மாதம் 25 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 750 ஆகும். இது வறுமையை ஒழித்துவிடுமா என்று கருதக்கூடாது. இது மேலும் அவர்களை வறுமைக்குத் தள்ளாமலும், பட்டினி சாவுகளைத் தடுக்கவும் நிச்சயம் இது உதவும் என முன்னாள் புள்ளியியல் துறை தலைவர் பிரணாப் சென் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆய்வுகள் அனைத்துமே ஏழ்மை நிலை மற்றும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்குபவையாக உள்ளன. கரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையிந்போது ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் மாதம் 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 80 கோடி மக்களுக்கு உணவு தானிய விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை விரிவுபடுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய பொருளாதார ஆய்வறிக்கை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், கரோனா காலத்தில் இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21-ம் நிதி ஆண்டில் மைனஸ் 6.6 சதவீதமாக சரிந்த நிலையில் வேளாண் உற்பத்தி மட்டும் 3.3 சதவீத வளர்ச்சியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. அதில் இந்தியா ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதில் ஒரு சதவீத பணக்காரர்கள் வசம் நாட்டின் மொத்த வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. கரோனா காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையம் 2019-ல் வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பண பரிமாற்றத்துக்கு ஒரு வழியாக மாறி நலத்திட்டமாக உருவெடுத்தது. இதன் மூலம் ஏற்றத்தாழ்வு ஓரளவு குறைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE