ஆந்திராவில் 24 அமைச்சர்களும் ராஜினாமா - புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

By செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அமராவதியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தின் இறுதியில் ஏற்கனவே கூறியபடி 24 அமைச்சர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன் பெற்றுக் கொண்டார்.

இதிலிருந்து கடந்த சுமார் 3 ஆண்டுகளில் மக்களுக்கு நன்கு சேவை புரிந்த 5 அல்லது 6 பேரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும், மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் ராஜினாமா செய்த தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெங்கடராமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மற்றொரு அமைச்சராக பணிபுரிந்த நானி என்பவர் பேசும்போது, நன்றாக பணியாற்றக்கூடிய, அனுபமிக்கவர்கள் 4 அல்லது 5 பேர் மட்டும் மீண்டும் அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்றும், மற்றவர்கள் கட்சி பணிகளில் ஈடுபட்டு அடுத்ததாக மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் அமர பாடுபட வேண்டுமெனவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார் என தெரிவித்தார்.

24 அமைச்சர்களிடமிருந்து பெற்ற ராஜினாமா கடிதங்கள் ஆளுநர் மாளிகைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இரவுக்குள் ஆளுநர் ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. வரும் 11-ம் தேதி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா, சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாமென கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE