திருவனந்தபுரம் கோயில் தங்கம் லாரி மணலோடு தஞ்சாவூர் வந்ததா?: 577 பக்க அறிக்கையால் பரபரப்பு: உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை

By எஸ்.ரவிகுமார்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது உள்பட பல தகவல்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 577 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் புராதனமானது. கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான டி.பி.சுந்தரராஜன், கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து, நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ள கேரள உயர் நீதிமன்றம் 2011-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதைத் தொடர்ந்து, கோயிலை முழுமையாக ஆய்வு செய்ய மத்திய தொல்பொருள் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

6 சுரங்க அறைகள்

பத்மநாப சுவாமி கோயிலுக்குள் 6 சுரங்க அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கெடுக்க வசதியாக ஏ, பி, சி, டி, இ, எஃப் என அவற்றுக்கு பெயரிடப்பட்டது. முதல் 2 அறைகள் வெகு காலமாக திறக்கப்படாதவை. மற்ற 4 நான்கு அறைகளும் அவ்வப்போது திறக்கப்படுபவை என்றும் கூறப்பட்டது. அந்த அறைகளில் ஏராளமான தங்க நகைகள், நவரத்தினக் கற்கள் பதித்த மாலைகள், நாணயங்கள், சிலைகள், வெள்ளிப் பாத்திரங்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றை மதிப்பிட 7 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியானது.

ரூ.1 லட்சம் கோடி பொக்கிஷம்

நகைகளின் புராதனத் தன்மையைக் கணக்கிட்டால் பொக்கிஷத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலைவிட அதிக சொத்துகள் இருப்பதால் உலகிலேயே பணக்கார சுவாமி பத்மநாபர்தான் என்று கூறப்பட்டது. கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

‘பாம்பு கதவை திறந்தால் ஆபத்து’

இந்நிலையில், வெகு காலமாக திறக்கப்படாத ‘பி’ அறை, இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. அதில் நாகப்பாம்பு சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததால், அதை திறந்தால் ஆபத்து நேரிடும் என்று கூறி மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த அறையை திறக்கும் முடிவு கைவிடப்பட்டது.

35 நாட்கள் தங்கி ஆய்வு

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் கோயில் சொத்து மற்றும் அதன் நிர்வாகம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் 35 நாட்கள் தங்கி ஆய்வு செய்த அவர் சமீபத்தில் 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்:

கோயில் தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் மன்னர் குடும்பத்தினர் நேரடியாக தலையிடுவதை தடுக்க வேண்டும். கோயில் சொத்துகளை முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழுவினர் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் இந்த தணிக்கைக்கு உதவ வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும் மன்னர் குடும்பத்தினரின் அறக்கட்டளை மற்றும் அதுதொடர்பான நிறுவனங்களின் கடந்த 25 ஆண்டுகால செயல்பாடுகளையும் தணிக்கை செய்ய வேண்டும்.

மன்னர் குடும்பத்தின் சொத்து கள் தொடர்பாக தற் போதைய மன்னர் வாரிசு ‘மூலம் திருநாள் ராமவர்மா’ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

முலாம் பூசும் கருவி மர்மம்

‘பி’ அறை வெகு காலமாக திறக்கப்படவில்லை என்று மன்னர் தரப்பில் கூறப்பட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள நகைகளை புகைப்படமும் எடுத்திருக்கின்றனர். மன்னர் குடும்பத்தினர் அந்த நகைகளை தங்கள் சொந்த சொத்துகளாகவே கருதியிருக் கின்றனர். அதை விற்கும் நோக்கில் புகைப்படம் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

தங்க முலாம் பூசும் கருவி கோயிலுக்குள் கிடைத்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. போலி நகைகளுக்கு தங்க முலாம் பூசி உள்ளே வைத்துவிட்டு, அசல் நகைகள் திருடப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

3 கிலோ எடையுள்ள சரபொலி மாலை உள்பட 17 கிலோ தங்கத்தை பெற்றுக்கொண்டதாக பழவங்காடியைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜூ என்பவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்பாக தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த பொற்கொல்லர்கள்தான் பத்மநாப சுவாமி கோயில் ஆஸ்தான கொல்லர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போது, லாரி மணலோடு சேர்ந்து தங்கத் துகள்களும் கோயிலுக்குள் இருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இவை குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே உள்ள பாதாள அறைகள் தவிர மேலும் 2 அறைகள் உள்ளன. அவற்றையும் திறந்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

‘ஆதாரம் இல்லை’

கேரள பொற்கொல்லர் ராஜூ சனிக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில், ‘‘முன்னாள் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (கடந்த ஆண்டு இறந்துவிட்டார்) காலத்தில் கோயிலின் ஒத்தக்கல் மண்டபத்தில் உள்ள அஷ்டதிக் பாலகர் சிலைக்கு தங்கக் கவசம் செய்வது போன்ற பணிகளுக்காகவே தங்கத்தைப் பெற்றுக்கொண்டேன். அந்த பணிக்கு ரூ.10 லட்சம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், மன்னர் இறந்துவிட்டார். பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படையிலான பணி என்பதால் எழுத்துபூர்வமாக என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அந்த வேலைக்காக இன்னும் எனக்கு மன்னர் குடும்பத்திடம் இருந்து ரூ.84 லட்சம் வரவேண்டி இருக்கிறது. அதையும் மன்னர் வாரிசுகள் தரவில்லை’’ என்றார்.

மன்னர் குடும்பம் மறுப்பு

“கோயிலுக்கு பொற்கொல்லர்கள் வரவழைக்கப்பட்டு தங்க வேலைகள் செய்வது பல காலமாக உள்ள நடைமுறை. அவ்வாறு தங்க வேலை செய்யும்போது கீழே உதிரும் தங்கத் துகள்களை அவர்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவது காலம் காலமாக உள்ள வழக்கம். மற்றபடி, லாரியில் தங்கம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப் படுவது அடிப்படையற்ற புகார்’’ என்று மன்னர் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்