புதுடெல்லி: தமிழகத்தை ஆளும் திமுகவின் அலுவலகம் டெல்லியில் திறக்கப்படுகிறது. நாட்டின் தலைநகரில் அமையும் இந்த அலுவலகம் கட்சிப்பணிகளுக்கு எந்த வகையில் பயன்படும் எனும் கேள்வி எழுந்துள்ளது.
டெல்லியில் தம் எம்.பி.க்களுக்கான அரசு குடியிருப்புகளையே பல மாநில அரசியல் கட்சிகளும் தங்கள் தலைநகர அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தன. இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டப் பல காரணங்களால் உச்ச நீதிமன்றம் அதன் மீது ஒரு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் டெல்லியில் அரசியல் கட்சிகளுக்கான அலுவலகம் அமைக்கும் அறிவிப்பு 2006இல் வெளியானது. இதன்படி குறைந்தது ஏழு எம்.பிக்களுடனான கட்சிகளுக்கு நிலம் ஒதுக்கீடு தொடங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு வரை இதில், படிப்படியாகப் பல திருத்தங்களும் செய்யப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரியதாக பாஜக அலுவலகம், டெல்லியின் மையப்பகுதியான தீனதயாள் உபாத்யா மார்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தான் திமுகவிற்கும் கட்சி அலுவலகம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1987இல் திறக்கப்பட்ட திமுக தலைமை அலுவலகம், சென்னையின் அண்ணா அறிவாலயம்.
இதன் அடுத்த நிலையில் தலைநகரான டெல்லியிலும் இன்று 'அண்ணா-கலைஞர் அறிவாலயம்' எனும் பெயரில் கட்சிக்கான அலுவலகக் கட்டிடம் திறக்கப்படுகிறது. இதை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திமுகவின் செல்வாக்கை தலைநகரில் காட்டும் வகையில் அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பல தலைவர்களும் வருகைதர உள்ளனர்.
மூன்று அடுக்குகளிலான இக்கட்டிடத்தில், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் கூட்டங்களுக்கான அரங்கு, தலைவர்கள் ஓய்வறை, நூலகம், செய்தியாளர் அறை எனப் பல வசதிகள் உள்ளன. கிரானைட் கற்களால் பார்ப்பவரைக் கவரும் விதத்தில் அமைந்த இந்த கட்டிடத்தை திமுக, எந்தவகையில் டெல்லியில் பயன்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. டெல்லியில் திமுக தொண்டர்கள் சொல்லும்படியாக இல்லை.
இங்கு நடைபெறும் தேர்தல்களிலும் நடவடிக்கைகள் இருப்பதில்லை. மேலும், திமுக எம்.பி.,க்களுக்கான அலுவலகம் தற்போது நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியில் அதிமுக அலுவலகமாக இருந்தது. கூட்டத் தொடர்களின் போது இந்த அலுவலகம் எம்.பிக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருக்கும். இதையே திமுக முறையாக பயன்படுத்துவது இல்லை எனப் புகார் உள்ளது. இதனால், டெல்லியில் இன்று திறக்கப்படும் புதிய கட்டிடம் மீதும் கேள்விகள் எழத்துவங்கி உள்ளன.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் திமுகவின் முன்னாள் எம்.பி.,க்கள் வட்டாரம் கூறும்போது, ''பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பயன்படுத்தும் அளவிற்கு திமுகவால் அதன் அலுவலகத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில், அதற்கான நாடாளுமன்ற கட்சி அலுவலகத்திற்கு நாம் செல்ல நேரிடும் போது அங்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூட ஓர் உதவியாளர் வைக்கப்படவில்லை. இந்த அலுவலகத்தில் தற்போதுள்ள எம்.பிக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களது நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உதவும் வகையிலும் அலுவலர்கள் கிடையாது.
உதவியாளர்களுக்கான அரசு ஊதியமாக ரூ.40,000 இருப்பினும் அவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு பணியாற்றும் நிலை உள்ளது. இதை நம் தலைமையும் தட்டிக் கேட்பதில்லை. இந்த நிலையில், அதை விடப் பல மடங்கு பெரிதான புதிய கட்டிடத்தை கட்சிக்காக எப்படி பயன்படுத்தப்படும் எனப் புரியவில்லை.
ஆளும் கட்சிகளுக்கு தங்கும் விடுதியாக பலசமயம் பயன்படும் தமிழ்நாடு அரசு இல்லங்களின் கிளைகளாக இந்த அலுவலகம் இருந்து விடக் கூடாது. இந்த அலுவலகம் டெல்லியில் திமுகவினருடன் பொதுமக்களும் பலன் அடையும் இடமாக வளர வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.
தென் இந்தியாவைச் சேர்ந்த கட்சிகளில் முதலாவதாக டெல்லியில் திமுக அலுவலகம் அமைகிறது. இதற்கும் முன்பாக கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்ட அதிமுகவின் சாக்கேத் பகுதி அலுவலகம் இன்னும் நிறைவு பெறவில்லை. கடந்த வருடம் வசந்த்கஞ்சில் உள்ள தன் நிலத்தில் கட்டிடத்திற்கான பூஜை போட்டது தெலுங்கானாவின், தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சி. ஆந்திராவின் தெலுங்கு தேசம் இன்னும் கட்டிடப்பணியை தொடங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago