தடுப்பூசியால் ஒமைக்ரான் தடுக்கப்பட்டது: அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று உறுப்பினர் ஒருவரின் துணை கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளிக்கையில் கூறியதாவது:

கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவியது. ஒமைக்ரான் பரவலால் பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. அந்தநேரத்தில் இந்தியாவில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விட்டதால், ஒமைக்ரான் பரவல் தடுக்கப்பட்டுவிட்டது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அவ்வப்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு நாட்டுக்கு பெரிதும் உதவியது. அத்துடன் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான முதன்மை வழிகாட்டியாக விளங்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் டெல்டா வகை வைரஸால் இந்தியாவில் பாதிப்பு அதிகம் காணப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் 2022 ஜனவரியில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால், சிறந்த நிர்வாகம், தடுப்பூசி போடும் பணியால் ஒமைக்ரான் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இவர் அவர் கூறினார். -பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE