100 நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி குறைப்பு: சோனியா புகாருக்கு அமைச்சர்கள் பதில்

புதுடெல்லி: நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்ட விவகாரத்தை மக்களவையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலைதிட்டம் சிலரால் கேலி செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் கரோனா தொற்றுநோய் காலத்தில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் உதவியாக இருந்தது. இத்திட்டத்துக்கு தொடர்ந்து நிதி குறைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடானது 2020-ம் ஆண்டை விட 35 சதவீதம் குறைவாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வேளையில் நிதிகுறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பும் குறித்த காலத்துக்குள் சம்பளமும் பெறுவதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை இது பலவீனப்படுத்தியுள்ளது.

பல மாநிலங்களின் கணக்குகளில் ரூ.5,000 கோடி வரைநெகட்டிவ் பேலன்ஸ் இருப்பதால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சமூகத் தணிக்கை மற்றும் லோக்பால் நியமனம் தொடர்பான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவரை மாநிலங்களின் வருடாந்திர தொழிலாளர் வரவு செலவுத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக தணிக்கை திறம்பட செய்யப்பட வேண்டும், ஆனால் அதற்கான பணத்தை நிறுத்துவதன் மூலம் தொழிலாளர்களை தண்டிக்கக் கூடாது. எனவே இத்திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

அமைச்சர்கள் பதில்

இதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பதில் அளிக்கும்போது, “உறுப்பினரின் கருத்து உண்மைக்கு மாறானது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-14-ல் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டது. இது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 1.12 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளது” என்றார்.

சோனியா காந்திக்கு தகவல்ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளிக்கும்போது, “ஐ.மு. கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்தது. மோடி அரசால் இந்த ஊழல் களையப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சொத்துகள் தற்போது ஜியோ-டேக்கிங் செய்யப்படுகிறது. தொழிலாளர்களுக்கான ஊதியம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது” என்றார்.

ஐ.மு.கூட்டணி ஆட்சி தொடர்பான அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE