மாஸ்கை கழட்டும் மகாராஷ்ரா: முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சனிக்கிழமை முதல் அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெரும்பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிராவில் கோவிட் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட இருக்கும் நிலையில் முகக்கவசம் அணிதல் அறிவுறுத்தப்படும், ஆனால் கட்டாயாம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தப் புத்தாண்டு குடிபத்வாவை (மராத்தி புத்தாண்டு) கொண்டு வருவதால், மகாராஷ்ட்ராவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுகிறது என முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் யாரும் மரணமடையவில்லை. மாநிலத்தின் 35 மாவட்டங்களிலும் 964 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். யாவட்மால், வாசிம், ஹங்கோலி மாவட்டங்களில் புதிதாக யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE